
விஜய் சேதுபதி, அசரவைக்கும் நயன்தாரா, மன்சூர் அலிகான், பார்த்திபன் சம்மந்தப்பட்ட ஒரு சில நகைச்சுவைக் காட்சிகள் , ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு, இவற்றைத் தவிர பாராட்டுவதற்கு படத்தில் ஒன்றும் இல்லை.
படத்தில் வரும் ராதிகா கதையில் என்ன செய்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்க , ராதிகா ஏன் இப்படி மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் பேசியது போல கொஞ்சிக்கொஞ்சிப் பேசுகிறார் என்பது புரியவே இல்லை .
ஒரு போக்கிலியால் தாய் தந்தையை இழந்த காது கேளாத பெண் ஒருத்தி, அந்த அயோக்கியனை பழிவாங்க விரும்புகிறாள் என்பது படத்தின் ஒருவரிக்கதை. அதை சொல்லியிருக்கும் முறை சுவையாக இல்லை.
போக்கிலி பார்த்திபனைக் கொலை செய்ய முயற்சி என்று ஒரு காட்சி வைத்துள்ளார்கள் . படம் பார்க்க வரும் ரசிகனை கொலை செய்கிற காட்சி அது.
நகைச்சுவை என்ற பெயரில் மிகக் கேவலமான கெட்ட வார்த்தையை, நயன்தாராவை நெருக்கமாகக் காட்டி, அவரது குவிந்த உதடுகளால் மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கிறார்கள். குடும்பத்தோடு படம் பார்க்கப் போகிறவர்கள் கூனிக்குறுக வேண்டியதுதான்.
அதே போல ஆரம்பக் காட்சியில் அதே உதட்டு குளோசப்பில் விஜய் சேதுபதி சொல்லும் இரண்டு கேவலமான கெட்ட வார்த்தைகளை , ”ரோஜா .. பூமால” என்று காது கேளாத காதம்பரி நல்லவிதமாக புரிந்து கொள்கிறார்
வெடிகுண்டு வெடிக்கும் காட்சியில் அம்மா சாவதையும் காதம்பரிக்கு காது செவிடாவதையும் அவ்வளவு அழுத்தமாக சொல்லிஇருக்கும்போது அதற்கான நியாயத்தை இரண்டாம் பகுதித் திரைக்கதையில் கொடுத்திருக்க வேண்டாமா ?
நயன்தாரா வேடமும் பொருத்தமாக இல்லை. அவருக்குக் காதுதான் கேக்காது . ஆனால் படத்தில் மூளையே இல்லாத மாதிரி நடந்துகொள்கிறார்.
படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவன் இன்னும் நிறையப் பயிற்சி எடுக்கவேண்டும்.


