
ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில், பயிற்சியாளரான விக்ரம், மகிழுந்து ஓட்டுவதில் சூரர். ஓட்டுநர் வேலை அவருக்குப் பகுதி நேர வேலைதான். உண்மையான வேலை, நிழல் உலக சமாச்சாரங்களுக்கு உதவுவது. இவரது ‘திறமை’யைப் பார்த்துவிட்டு நிறைய ‘வேலை’களைக் கொடுக்கிறார் தாஸ் (பசுபதி) என்கிற தாதா. ஓட்டுநர்பயிற்சிப் பள்ளியில் விக்ரமிடம் பயிற்சிபெற வருகிறார் சமந்தா.
இன்னொரு பக்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு ஊரில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த 40 பேர் ஆதிக்கச் சாதி யினரால் கொல்லப்படுகிறார்கள். இந்த ஊருக்கு ‘பிரசாதம்’ மறைத்து வைக்கப் பட்ட மகிழுந்து ஒன்றை ஓட்டிச்செல்லும் வேலையை விக்ரமுக்குக் கொடுக்கிறார் பசுபதி.
காரில் ‘பிரசாதமாக’ சமந்தா அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியாமலேயே விக்ரம் பறக்கிறார். சமந்தா இருப்பதும் அவர் கடத்திச் செல்லப் படுவதும் ஒரு கட்டத்தில் விக்ரமுக்குத் தெரியவருகிறது. சமந்தா முசோரிக்கு ஏன் கடத்தப்பட்டார், அங்கு என்ன நடக்கிறது ஆகிய கேள்விகளுக்கான பதில்தான் ‘10 எண்றதுக்குள்ள’.
காட்சியமைப்புகள் பிரமாண்ட மாகவும், ஆங்கிலப் படங்களைப் போல் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதும் பார்வையாளர்களைக் கவரும். ஆனால் இந்த அக்கறையைத் திரைக் கதையில் காட்டவில்லை. பெரிய நட்சத் திரங்களும் பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளும் போதும் என்று நினைத்து விட்டார் போலும். சமந்தா கடத்தப்பட்டதும் வேகமெடுக்கும் திரைக்கதை, ஆந்திரா, அஸ்ஸாம் என்று வழிநெடுகிலும் ஓய்வெடுக்கிறது. ஆங்காங்கே எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும் அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகள் பொறுமையைச் சோதிக்கின்றன.
சமந்தாவையும் உத்தராகண்டில் நடக்கும் சாதியக் கொலைகளையும் கச்சித மாகத் தொடர்புபடுத்தும் இயக்குநர், சாதியக் கொலைகளின் பின்னணிக் காரணத்தை அழுத்தமாகச் சொல்லியிருக் கலாம்.
விக்ரம் உற்சாகமும் ஆக்ஷன் பரபரப்பு மாய் சாகச நாயகனாக வலம் வருகிறார். ஒயிலான தோற்றம், அநாயாசமான செயல்பாடுகள், நடனம், சண்டை என எல்லாவற்றிலும் அசத்துகிறார். விக்ரமுக்கு இணையான பாத்திரம் சமந்தாவுக்கு. லூசுப் பெண்ணாக வந்தாலும் உணர்ச்சி களைக் கொட்ட வேண்டிய இடங்களில் நன்றாக நடிக்கிறார். காதலுக்காக உருகு வது, சண்டையில் தூள் பரத்துவது என்று மிரட்டுகிறார். பசுபதி, ராகுல் சிங் ஆகி யோருக்குப் பெரிதாக வேலை இல்லை.
விக்ரமின் கடும் உழைப்பு. இயக்குநர் விஜய்மில்டனின் மெனக்கெடல், சமந்தா, பசுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஆகிய பல விசயங்கள் படத்தில் இருந்தும் திரைக்கதை பலவீனமாக இருப்பதால் ரசிக்கமுடியவில்லை.


