இன்று தமிழ்ப்புத்தாண்டன்று இந்துப் புத்தாண்டு என்று சொல்லிக்கொள்ளுங்கள் – மலேசிய அமைச்சர் அறிவிப்பு

இன்று சித்திரை முதல்நாள். இதைப் பலர் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லிவருகின்றனர். தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அரசியல்தலைவர்கள் இதற்கு வாழ்த்து சொல்லியும் வருகின்றனர்.

ஆனால், தமிழ் உணர்வாளர்கள் தை முதலே தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடி வருகின்றனர்.

நித்திரையில் இருக்கும் தமிழா… சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்…

தரணி ஆண்ட தமிழனுக்குத் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு

என்று புரட்சிப்பாவலர் பாரதிதாசனும் பாடிச் சென்றுள்ளார்.

இதனால் ஆண்டுதோறும் இது குறித்த விவாதங்கள் நடந்தவண்ணமுள்ளன.

மலேசியாவிலும் இவ்வாண்டு இதுகுறித்த கோரிக்கை எழுந்தபோது, மலேசிய அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா, இன்றைய நாளை தமிழ்ப்புத்தாண்டு என்றழைக்க முடியாது வேண்டுமானால் சித்திரை புத்தாண்டு அல்லது இந்து புத்தாண்டு என்றழைக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார்.

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன்ஷான் என்பவர், இன்றைய நாளை தமிழ்ப்புத்தாண்டு என அறிவிக்கவேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் மற்றும் மொழியியல் ஆய்வு மையத்தின் முதன்மை விரிவுரையாளர் கொடுத்த விளக்கத்தையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Leave a Response