திமுக வெல்வது நல்லது – யாழ் பல்கலைப் பேராசிரியர் கட்டுரை

தமிழக அரசியலையும் அதில் இயங்கும் கட்சிகளையும் அமைப்புகளையும் ஈழத் தமிழர்கள் தமது கடந்த கால அனுபவத்தின் வாயிலாக *மாத்திரம்* அணுகுவது தவறு என்றே நான் கருதுகிறேன்.

தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடர்பில் நாம் வைத்திருந்த அதீத எதிர்பார்ப்பே இன்று நாம் தமிழக அரசியல் தொடர்பில் வைத்திருக்கும் சுருங்கிய விளங்கிக் கொள்ளலுக்கு அடிப்படை என நான் கருதுகிறேன்.

அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டும் இந்திய இறையாண்மையை, இந்திய அரச சட்டகத்தை கேள்விக்குட்படுத்த முடியாத, விருப்பமில்லாத அளவுக்கு இந்திய அரசியலில் ஒரு அங்கமாக உள்ளார்கள். ஆகவே அவர்கள் இந்திய அரசியலின் உள்ளார்ந்த வரையறைகளை கடந்து ஈழத் தமிழர் பிரச்சனையில் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனம்.

ஆனால் தமிழகத்தை அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலிலும் அதனை விரிவாக இந்திய அரசியல் சூழலிலும் வைத்து பார்க்கும் போது திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே ஒன்று தான் என நாம் கருதுவதும் செயற்படுவதும் தவறு என்பதும் பெறப்படும்.

இந்தியாவை ஒரு இந்துப் பேரினவாத அரசாக மாற்றத் துடிக்கும் பாஜகவை எதிர்க்கும் வலுவான இயக்கம் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணி மாத்திரமே என்பதை நிராகரிக்க முடியாது. எனவே தமிழகத்தில் செயற்படும் மே 17 இயக்கம் போன்ற ஈழ ஆதரவு (கட்சிகள் அல்லாத) அமைப்புகள் மதச் சார்பற்ற கூட்டணியின் வெற்றியை விரும்புவதும் அதற்காக வெளிப்படையாக இயங்குவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மே 17 இயக்கம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து தமிழக அரசியல் பரப்பில் ஈழ அரசியல் நிலைப்பாடுகளை மேம்படுத்தும் பணியைச் செய்வதற்கான சூழல் அவசியமானது.

தமிழகத்தில் மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தக் கூடிய, இந்துத்துவாவை எதிர்த்து நிற்கக் கூடிய சக்திகள் ஆட்சியில் இருப்பது ஒரு குறைந்த பட்ச முற்போக்கு அரசியலை செய்வதற்கான வெளியை தக்க வைப்பதற்கான முன் நிபந்தனையாக உள்ளது.

தமிழகத்தில் ஈழ ஆதரவு தளத்திற்கும் சக்திகளுக்கும் தமது செயற்படு எல்லையைத் தக்க வைக்கவும் விரிவாக்கவும் இது அவசியமாக உள்ளது என்று அவர்கள் கருதுவதாக நான் நம்புகிறேன்.

தி. மு. க தொடர்பில் விரோத மனநிலையில் இருக்கும் ஈழப் பொதுப் புத்தியின் சிந்தனை செல்நெறி தவறானது, தேவையற்றது, எமது நலனுக்கு விரோதமானது.

திமுக தொடர்பிலான நெடிய வராலற்றுப் பார்வையை எடுக்க வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நீண்ட நெடிய சமூக நீதி அரசியல் பங்களிப்பு தொடர்பில் ஈழத்தின் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தெதெல்லாம் கலைஞர் காலை உண்ணாவிரதம் இருந்து மதியம் எழும்பி கட்டுமரம் கவிதை எழுதினார் என்பது மாத்திரம் தான். அதற்காக 2009இல் அவர்களின் நிலைப்பாடுகளை நாம் வெள்ளையடிக்க வேண்டும் என நான் கூறவில்லை.

தமிழகத்தை தமிழக அரசியல் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும் என்றும் எமக்கான நட்பு சக்திகளை நாம் தமிழகத்தில் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அது சீமான் என்ற ஒற்றைப் புள்ளியில் தேக்கமடையக் கூடாதென்றும் என்பதே நான் சொல்ல வருவது. சீமானினது வெளித்தள்ளும் தமிழ்த் தேசியவாத அணுகுமுறை எமக்குத் தேவையில்லாதது என நான் முன்னரும் சொல்லியிருக்கிறேன்.

திமுகவில் கவனிக்கத்தக்க பல ஆளுமைகள் உள்ளார்கள். ஆ. இராசா, கனிமொழி (திமுகவிற்கு தலைவராக இருக்கக் கூடிய கருத்தியல் தெளிவு உள்ளவர்கள் இவர்கள் இருவரே என நான் கருதுகிறேன்) தொடக்கம் இம்முறை முதல் முறையாக களம் காணும் கார்த்திகேய சேனாதிபதி, மருத்துவர் எழிலன் போன்றோரும் அவதானிக்கத்தக்கவர்கள். இதற்காக இவர்களில் விமர்சனம் இல்லாமல் இல்லை. இவர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்றும் நான் சொல்ல வரவில்லை. தேர்தல் அரசியலில் அவ்வாறான விட்டுக்கொடுப்பில்லாத, நாம் முழுமையாக எம்மை அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடிய ஆளுமைகள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அவர்களின் அரசியலை நாம் நேர்மறையாக நோக்க இடமுண்டு என்றே நான் கருதுகிறேன்.

அதே போன்று திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் ஒரு கருத்தாழமிக்க முக்கியமான தமிழகத்தின் ஆளுமை. திருமாவளவன் தமிழக முதல்வராக இருக்க வேண்டியவர். அது நடப்பதற்கான சாத்தியம் இல்லை என்பது தமிழகம் பெரியாரின் தடத்தில் இருந்து விலகி சமூக நீதிப் பயணத்தில் தேக்கமடைந்திருப்பதை காட்டுகின்றது.

ஈழ சமூகக் கட்டமைப்பும் தமிழக சமூகக் கட்டமைப்பும் வெவ்வேறானவை தான். அங்கு நடைபெறும் உரையாடல்களையும் சட்டகங்களையும் இங்கு அப்படியே பெயர்த்துக் கொண்டு வர முடியாது தான். ஆனால் தமிழகத்தின் சமூக நீதி அரசியல் பயணத்தில் இருந்து நாம் நிச்சயமாக பாடங்கள் கற்றுக் கொள்ளலாம்.

நிற்க.
திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வெல்வது, இன்றைய சூழலில், ஒப்பீட்டு அடிப்படையில், தமிழகத்துக்கு நன்மையானது. ஈழத் தமிழர் நலனை விரும்பும் தமிழக நட்புகள் இதனைத் திடமாக நம்புகிறார்கள். நாம் அந்தப் பார்வையை ஆதரிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

– குருபரன் குமரவடிவேல்
பேராசியர் மற்றும் ஆய்வாளர்
யாழ் பல்கலைக்கழகம்

Leave a Response