ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? – இந்தியா அறிக்கை

2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த தமிழினப்படுகொலை மற்றும் இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சாா்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இலங்கை அரசுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளும், சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா புறக்கணித்தது. மேலும் 13 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் புறக்கணித்தன.

இதனால் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு முன் இந்தியா தாக்கல் செய்த அறிக்கையில் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமுல்படுத்த வலியுறுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில்…

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படைக் கருத்துகளைக் கொண்டது.அதில் ஒன்று இலங்கை தமிழர்களுக்கான சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான எங்களின் ஆதரவு.மற்றொன்று இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்தல். இந்த இரண்டிற்கும் பரஸ்பர ஆதரவு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.இந்த இரண்டையும் அடையாளம் காணுவதில் இலங்கையின் செயல்பாடு மிகச்சிறப்பானது.

அரசியல் அதிகாரப் பகிர்வில் இலங்கை அரசாங்கம் அதன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என சர்வதேசச் சமூகம் விடுத்துள்ள அழைப்பை இந்தியா ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்குப் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response