ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்கமுடியாத பச்சைத்துரோகம் செய்த மோடி – மு.க.ஸ்டாலின் கடும்கண்டனம்

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று(மார்ச் 23) வெளியிட்ட அறிக்கையில்…..

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.

ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாசக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்” என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே பேட்டி அளித்திருந்தார். அதனைச் சுட்டிக் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.

மத்திய அரசு முறையான விளக்கம் எதையும் சொல்லவில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலாவது ஈழத் தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், உலகத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது மோடி அரசு.

இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பிரதிநிதி பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்.

இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை – உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இது தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது, துரோகமானது. எனவே, மிகுந்த கண்டனத்திற்குரியது. இலங்கையின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்பது விளங்கிவிட்டது. இது இலங்கைக்கு மிகவும் சாதகமான நிலைப்பாடுதான் என்பதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுவிட்டது.

வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத் தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் பச்சைத் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Response