விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பானைச் சின்னம் – தீவிரமாகப் பரப்பும் கட்சியினர்

ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில், தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.

அக்கட்சி, காட்டுமன்னார்கோவில், வானூர், செய்யூர், அரக்கோணம், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஒரு அரசியல் கட்சி சார்பில் அந்த மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பொதுச்சின்னம் கிடைக்கும். ஆனால், விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இருப்பினும் அக்கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கோரி வந்தது.

இந்நிலையில், நேற்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அப்போது, வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன. இதில், விசிக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதன் வேட்பாளர்களுக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 6 தொகுதிகளிலும் அச்சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வேலைகளில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response