புதுச்சேரியில் காங்கிரசுக் கூட்டணி வெற்றிக்கு வழிவகுத்த பாமக

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாசக, என்.ஆர்.காங்கிரசு, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளைப் பிரிப்பதில் பாசக, அதிமுகவுக்கு இடையே இழுபறி ஏற்பட்டது. அப்போது, பாமக தரப்பில் மாநில அமைப்பாளர் தன்ராஜ், பாசக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவைச் சந்தித்து, தங்களுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கக் கோரினார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும் பாமக தரப்பில் சந்தித்துப் பேசினார். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாமகவை பாசக இணைக்கவில்லை. இறுதியில் ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் இன்று (மார்ச் 17) கூறுகையில், “புதுச்சேரி, காரைக்காலில் பாமக தனித்து 15 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, இன்று 9 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

வேட்பாளர்கள் விவரம்:

மண்ணாடிப்பட்டு – வெங்கடேசன்,
அரியாங்குப்பம் – சிவராமன்,
மங்கலம் – மதியழகன்,
தட்டாஞ்சாவடி – கதிர்வேல்,
லாஸ்பேட்டை – நரசிம்மன்,
மணவெளி – கணபதி,
இந்திராநகர் – வடிவேல்,
ஊசுடு – கலியபெருமாள்,
திருபுவனை – சாண்டில்யன்.

புதுச்சேரியில் பாசக கூட்டணியில் கூட்டணிக் கட்சியான பாமக தனித்துப் போட்டியிடுவதால் தேசிய சனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.இது காங்கிரசு கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response