புதுச்சேரியில் 2016 ஆம் ஆண்டு உத்தியைக் கடைபிடிக்கும் காங்கிரசு

புதுச்சேரியில் காங்கிரசுக் கட்சி போட்டியிடும் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை.

தமிழகத்துடன் சேர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரசு போட்டியிடும் நிலையில் ஏனாம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரசு 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட் 1 மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 என பகிரப்பட்டுள்ளது.

ஏனாம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என காங்கிரசு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை புதுச்சேரி முதல்வராக அறிவித்தது அகில இந்திய காங்கிரசு தலைமை. தொடர்ந்து அதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் அதே உத்தியைக் கடைபிடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response