இன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி?

தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அமமுக மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் கடைபிடிக்கும் நாள், மொழிப்போர் ஈகியர் நினைவு நாள். ஆண்டுதோறும் சனவரி மாதம் 25 ஆம் தேதி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் பேரணி, பொதுக்கூட்டம், கருத்தரங்கு உள்ளிட்ட பலவகைகளில் மொழிப்போர் ஈகியரை நினைவு கூர்கின்றனர்.

இந்நாள் உருவானது எப்படி?

கீழப்பளூவூர் சின்னச் சாமி நினைவு நாள்

25.1.1964

1963 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு இளைஞன் பக்தவச்சலத்தின் காலில் விழுந்து கதறினான்.
“ஐயா, தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள். நீங்களும் தமிழர்தானே”

பக்தவச்சலம் காவல்துறைக்கு உத்தரவு போட்டார்.
“இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்”.

ஒரு மாத காலத்திற்குப் பின்-

25.1.1964 ஆம் நாள் அந்த இளைஞன், திருச்சி தொடர்வண்டி நிலையத்தின் வாசலில் விடியற்காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கத்தியவாறு கருகிப் போனான்.

தமிழக முதல்வர் பக்தவச்சலத்தால் ‘பைத்தியம்’ என்று அழைக்கப்பட்ட அந்த வீர இளைஞன் தான் கீழப்பளூவூர் சின்னச்சாமி. இறக்கும் போது அவன் வயது 27.

சின்னச்சாமி. அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்.

திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் கீழப்பளூவூர்.
ஆறுமுகம் தங்கத்தம்மாள் சின்னச்சாமியின் பெற்றோர்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்த சின்னச்சாமியின் ஓய்வு நேர வேலை சுயமரியாதை இயக்க நூல்களையும், நம் நாடு, திராவிட நாடு, முரசொலி ஏடுகளையும் படிப்பது தான்.

திராவிடச்செல்வி- தன் ஒரே மகளுக்குச் சின்னச்சாமி வைத்த பெயர். தன் மகளை, மனைவியை, தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்னையே நம்பியிருந்த தாயை, வாழ வைக்க வேண்டிய கடமையை விட தாய்மொழிக்காகப் போராடும் வெறிதான், சின்னச்சாமியை ஆட்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தான், ‘தென் வியட்நாமில் புத்த பிக்குகள் அமைதி வேண்டி தீக்குளித்தார்கள்’ என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்தது. முதல்வர் பக்தவச்சலத்தால் கைது செய்யப்பட்டு, விடுதலையான சின்னச்சாமி அன்று முதல் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தான். 24.1.1964 வெள்ளிக்கிழமையன்று பள்ளிப் பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கி ‘தமிழ் வாழப் பாடுபடுங்கள்’ என்று உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தார்.

“வயலுக்குப் போய் வேலை பார்க்கக் கூடாதா? என்று கேட்டார்கள் அவரது தாயாரும், மனைவி கமலமும்.
“வேலைக்குத்தான் போகிறேன். திராவிடச் செல்வியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”
என்று கூறிவிட்டு, திருச்சி வந்து 25.1.1964 அதிகாலை 4.30 மணிக்கு ஒளிப்பிழம்பாய் எரிந்து போனார் சின்னச்சாமி.

ஆதிக்க இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து உயிர் மாண்ட முதல் தமிழரும் இவரே! இவர் மறைந்த நாளினையே மொழிப்போர் ஈகியர் நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்பட்டு வருகிறது.

மொழிப் போர் ஈகியர்களின் “தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி” கனவு இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது.

பேராயக் கட்சியின் (இந்தி, ஆங்கிலம், தமிழ்) மும்மொழிக் கொள்கையை எதிர்த்து முழங்கிய திராவிடக்கட்சிகள் அதற்கு மாற்றாக இருமொழிக் கொள்கையை (ஆங்கிலம், தமிழ்) முன்மொழிந்தன. அதன் விளைவாக தமிழ்நாட்டில் தமிழுக்குரிய இடத்தை தற்போது ஆங்கிலம் ஆக்கிரமித்து விட்டது.

தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகிறது. தமிழ் மொழி “தமிங்கில மொழி”யாக மாற்றப்பட்டு அதுவே பேச்சுமொழியாகவும் மாறி வருகிறது. அன்று வடமொழி கொண்டு தமிழை ஆரியம் அழித்தது. இன்று ஆங்கில மொழி கொண்டு தமிழை அழித்துக் கொண்டு வருகிறது.

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்பதை கீழப்பளூவூர் சின்னச்சாமி மறைந்த இந்நன்னாளில் தமிழர்களுக்கு உரத்துக் கூறுவோம்!

Leave a Response