ஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு

அகில இந்திய காங்கிரசுக் கட்சி முன்னாள் தலைவர் இராகுல்காந்தி வணக்கம் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை செய்தார்.

அதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் இராகுல்காந்தி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

இன்று காலை 10 மணிக்கு ஊத்துக்குளிக்கு வந்த அவருக்குக் காங்கிரசுக் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். 10.30 மணிக்கு அவர் பெருந்துறையில் பொதுமக்களைச் சந்தித்தார்.

அங்கிருந்து ஈரோடு வந்த இராகுல் காந்தி அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் மற்றும் ஈ.வி.கே.சம்பத் உருவச் சிலைகளுக்கும் பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கும் அதன்பின் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் உருவச் சிலைகளுக்கும் இராகுல் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

ஈரோடு வந்த அவரிடம் ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக சமுதாயச் செயற்பாட்டாளர்கள் நேரில் மனு கொடுத்தனர்.

அதுகுறித்து சமுதாயச் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி எழுதியுள்ள பதிவில்….

ஏழு தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவு கோரி, இராகுல் காந்தி அவர்களுக்கு வேண்டுகோள் விண்ணப்பம்.

இந்திய தேசியக் காங்கிரசின் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் இன்று ( 24/01/2021 ) ஈரோட்டிற்கு வருகை புரிந்தார். அப்பொழுது இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைச் சிறையாளர்களாக உள்ள ஏழு தமிழரை விடுதலை செய்யக் குரல் எழுப்புமாறு வேண்டி நானும் மற்ற தோழர்களும், பல்வேறு அமைப்புகளின் சார்பில் விண்ணப்பம் ஒன்றை அவரிடம் அளித்தோம்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த விண்ணப்பத்தை அவர் படித்துப் பார்த்தார். பிறகு அதைத் தனது உதவியாளரிடம் கொடுத்தார்.

இதற்கான எதிர்வினை உண்டா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

வழங்கப்பட்ட ஆங்கில விண்ணப்பத்தில் நான் சுட்டிக் காட்டி இருந்த கருத்துகளின் சுருக்கமான தமிழ் வடிவம் –

“உங்கள் குடும்பத்தின் தலைவரை இழந்த கொடிய இழப்பினால் உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட பொறுத்துக் கொள்ள முடியாத வலியையும், வேதனையையும் உங்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆனால், காலம் என்பது வேதனைகளைக் குணப்படுத்தும் மிகப்பெரும் மருத்துவர் என்பதால், குற்றவாளிகளை மன்னிக்கும் அளவுக்கு இப்பொழுது நீங்கள் கருணை மிக்கவராக உள்ளீர்கள்.

இதன் காரணமாகத்தான், உங்கள் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக, நீங்களும், உங்கள் சகோதரி திருமதி பிரியங்கா காந்தி அவர்களும் உங்களது கொலை வழக்கில் தொடர்பு உடையவர்களை “முழுமையாக மன்னித்து விட்டோம்” ( Completely forgiven ) என்று 2018 மார்ச்சு 10ஆம் நாள் கோலாலம்பூரில் அழுத்தந்திருத்தமாதத் தெரிவித்து இருந்தீர்கள் ………

உங்களது அன்னையாரும் இதே நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

திரு.இராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான உச்சநீதிமன்ற மாண்புமிகு நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களும், மத்தியப் புலனாய்வு அமைப்பின் ( சிபிஐ ) முன்னாள் இயக்குநர் திரு. கார்த்திகேயன் அவர்களும், புலன்விசாரணை அதிகாரி திரு. தியாகராஜன் அவர்களும், இக்குற்றவாளிகள் போதுமான அளவுக்காலம் சிறையில் இருந்து விட்டதால், மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்யலாம் என முன்பே தெளிவாகக் கூறிவிட்டார்கள்.

“தமிழக அரசு இக்குற்றவாளிகளின் விடுதலைக்கு ஆதரவாக இருந்தால், இவர்களை விடுதலை செய்வதில் தடை ஏதுமில்லை” என உச்சநீதி மன்றமும் வழிகாட்டி உள்ளது.

எனவே, உங்களது தந்தையின் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஓர் அறிக்கையைத் தாங்கள் வெளியிட வேண்டும் எனவும், இந்த ஏழு சிறையாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் நாள் ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரைக்கு உங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.

ஏழு தமிழர் விடுதலை என்பது தமிழ் மக்களின் நீண்டநாள் கனவு என்பதால், இது குறித்த உங்களது ஆதரவு அறிக்கையை உரிய விரைவில் எதிர்பார்க்கிறோம்.”

– எனப் பல்வேறு அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துக் கையொப்பம் இட்டு, இறுதியில் அந்த ஆங்கில விண்ணப்பம் திரு. இராகுல் காந்தி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response