வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை – வரவேற்கும் வைகோ

உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பாசக அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ப் பலி ஆகி உள்ளனர். மத்திய அரசுடன் 8 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து, விவாதித்து நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இச்சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதனை மறுத்தால் நாங்கள் இச்சட்டங்களுக்குத் தடை விதிப்போம் என்று கூறினர். மேலும், இச்சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனு கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் இன்று, உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பாஜக அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Leave a Response