முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பு – 6 முக்கிய நிகழ்வுகள்

தூபி அழிப்பும் மீள் அடிக்கல் நாட்டலும் தொக்கி நிற்கும் நுண்ணரசியல்

கடந்த 08/01/2021 இரவு கிட்டத்தட்ட 9:00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமையப் பெற்றிருந்த நினைவுத்தூபி யானது பெக்கோ உதவியுடன் இடித்தழிக்கப்படுவதாக செய்தி பரவுகிறது இந்த பாதகச் செயலானது யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கின்ற சிறிசற்குணராசா அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் காண்டிபன் தலைமையில் இரவு வெளிச்சங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் செய்தியறிந்து இளைஞர்கள் பலர் பல்கலைக்கழக சூழலில் குழும ஆரம்பித்திருந்தார்கள் அவர்களில் அங்கே பிரசன்னமாகியிருந்த யாழ்பல்கலைக்கழக பழைய மாணவரும் சட்டத்தரணியுமான சுகாஸ் அவர்களும் அவரோடு இணைந்த பத்து வரையான பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்நுழைந்து தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள் அப்போது பதிவாளர் காண்டீபன் அவர்கள் பெக்கோ இயந்திரத்தை குறிப்பிட்ட குழுவினரின் மேல் ஏற்றுமாறு உத்தரவிடுகின்றார் மேற்படி குழப்பங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமநேரத்தில் அதிகளவு பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட உள்ளே இருந்த மாணவர்களை கைது செய்யும் ஏற்பாடும் நடைபெற மாணவர்களின் பாதுகாப்பின் பொருட்டு வெளியேறுகிறார்கள் வெளியேயும் அதிகளவான இளைஞர்கள் குழுமத்தொடங்குகின்றார்கள் அதற்கிடையில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகின்றார்கள் அதன்பிறகு நடந்த செய்தி அனைவரும் அறிந்ததே

இவையனைத்தும் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முதல் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி உள்ளிட்ட இராணுவக்குழு யாழ் பல்கலைக்கழக த்தினுள் வருகைதந்து துணைவேந்தருடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமையப் பெற்றிருந்த தூபிகளை பார்வையிடுகின்றது அப்போதே இவற்றை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதென்ற இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்படுகின்றது. ஏற்கனவே இருந்த துணைவேந்தர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ம் மேற்படி அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு அதை அவர் ஏற்றுக்கொள்ளாத சந்தர்பத்தில் அவர் பதவி விலக்கப்பட்டு தூபிகளை இல்லாது ஒழிக்கின்ற திட்டத்தை ஏற்றுக்கொண்ட சிறிசற்குணராசாவிற்கு துணைவேந்தர் பதவி வழங்கப்படுகின்றது இதற்கான சந்திப்பு பலாலி யில் உள்ள இராணுவத்தலைமையகத்தில் நடைபெற்று அதன்பின்னரே துணைவேந்தராக நியமிக்கப்படுகின்றார்

எதற்கும் அடிபணியாத சர்வாதிகார போக்கு கொண்ட துணைவேந்தராக தன்னைகாட்டிக்கொண்ட சற்குணராசா தக்க தருணத்திற்காய் காத்திருந்தார் அதற்கான தருணமும் அவருக்கு இலகுவாகவே கிடைத்தது ஏற்கனவே covid 19 பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகங்கள் சில மாதங்களாக மூட்ப்பட்டிருந்த நிலையில் அதை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு இரவோடு இரவாக அனைத்து தூபி களையும் இடித்து அப்புறப்படுத்தி விட்டால் அதன் பின்னர் வருகின்ற விளைவுகளை இலகுவாக எதிர்கொள்ளலாம் என்பதே அவர் போட்ட தப்புக்கணக்கு ஆனால் நடந்தது வேறு முதலாவது தூபி இடிக்கப்பட்டிருந்த போதே திட்டங்கள் அனைத்தும் தலைகீழாக மாறி புஸ்வாணமாக மாற வெலவெலத்துப் போனார் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்காத சற்குணம் தன்னை சுதாகரித்துக்கொண்டு அனைத்து ம் சட்டப்படியே நடைபெற்றது வெளியே நிற்கும் ஒரு சிலரை எவ்வாறு கலைக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும் என அறிக்கை விட்டார் நிலைமையின் விபரீதத்தை புரியாது

ஆனால் அடுத்த நாள் காலை தூபி அழிப்பே பிரதான பேசுபொருளாக மாறிவிட பல்கலைக்கழகம் முன்னால் பலநூற்றுக்கணக்கானோர் கூடத்தொடங்குகிறார்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது கடுமையான கண்டன அறிக்கை களை வெளியிட்டிருந்தார்கள் அதைவிட சர்வதேச ரீதியில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கனடா பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரபிதாக்கள் ஜேர்மன் லண்டன் போன்ற பலம்மிக்க நாடுகளின் அரசியல் பிரதிநிதிகளின் கண்டன அறிக்கை கள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமிருந்தன இதை சற்றும் எதிர்பார்க்காத இலங்கை அரசானது தன்னை சுதாகரித்துக்கொண்டு இராணுவத்தளபதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரைக் கொண்டு தாங்கள் இந்த விடயத்தில் எந்தவிதமான நெருக்குதல் களையோ அழுத்தங்களையோ கொடுக்கவில்லை இவை முழுக்க முழுக்க துணைவேந்தரின் தனிப்பட்ட முடிவே ஆகும் என அவசர அவசரமாக அறிவித்து துணைவேந்தரை ஆப்பில் செருகவிட்டு தான் தப்பித்துக் கொண்டது

இது ஒருபுறமிருக்க பல்கலைக்கழக த்திற்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்ட காரர்ளின் எண்ணிக்கை அதிகரிக்க நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் கொரோனாவை ஆயுதமாக எடுத்தது pcr குச்சியை லத்தியாக பாவித்தது போராட்டம் பின்மதியப்பொழுதில் கைவிடப்படுவதாக நீண்ட இழுபறிகளின் பின் மாணவர் ஒன்றியத்தினால் அறிவிக்கப்படுகிறது ஆனால் உண்மையான உணர்வுடன் அங்கு நின்றிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உண்ணாவிரத முடிவை எடுக்கின்றார்கள் அது பிரயோசனமில்லாதது தேவையில்லை என மாணவர் ஒன்றியம் சமரசம் படுத்த முயல அவர்கள் உறுதியாக வே தங்கள் முடிவில் நிற்க உண்ணாவிரதம் தொடர்வதாக அறிவிக்கின்றார்கள்

உண்மையில் அந்த உண்ணாவிரதமே இறுதியில் அனைத்தையும் மாற்றி இருந்தது மாணவர்கள் சிலர் தமது உண்ணாவிரதத்தை தொடர அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளாலும் இன்றைய தினம் திங்கட்கிழமை வடகிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள் அதற்கு பல்வேறு அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுஅமைப்புக்கள் முஸ்லீம் தலைவர்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை நல்கியதுடன் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும் அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கண்டன அறிக்கையையும் கர்த்தாலுக்கான அழைப்பையும் விட்டிருந்தார்கள் அதே வேளை இன்றைய தினம் சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் பேர்லினில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்பட இருக்கின்ற அதே வேளையில் பல நாடுகளிலும் கண்டண ஆர்ப்பாட்டங்கள் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்ற வேளையில் நேற்றைய தினம் கனடாவில் நடைபெற்ற மாபெரும் வாகனப் பேரணி போன்றவை கொடுக்கின்ற கொடுக்கப்போகின்ற அழுத்தங்கள் வருகின்ற மார்ச்மாதம் ஜெனிவாவில் இடம்பெற இருக்கின்ற கூட்டத்தொடர் இலங்கை தொடர்பாக மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என ஊகித்துக் கொண்ட அரசு சடக்கென்று காலில் விழுந்திருக்கிறது அது தமிழர்களின் காலை வாருவதற்காகவா அல்லது பிரச்சனையில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்வதற்காகவா என்பதை எதிர்வரும் காலங்கள் தான் பதில் சொல்லும் எதுவாயிருந்தாலும்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பானது
1) சற்குணம் என்கின்ற தமிழ்த்தேசியத்துரோகியை அடையாளம் காட்டியிருக்கிறது
2)உணர்வுள்ள மாணவர்களை அடையாளம் காட்டிஇருக்கிறது
3)எல்லோரையும் ஒன்றாக பயணிக்க வைத்திருக்கிறது
4)முஸ்லீம் மக்களை எம்மோடு இறுகப்பிணைத்திருக்கிறது
5)புலம் தளம் தமிழகம் என தமிழ்த்தேசிய அரசியல் ஒரு புள்ளியில் சந்திக்கவைத்திருக்கிறது
6)ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு தற்காலிக வெற்றி கிடைத்திருக்கிறது

இறுதியாக
இறுதிவரை உறுதியோடு இருந்து உண்ணாநோன்பிருந்து உடல்நிலை மோசமான பின்பும் குளுக்கோஸை ஏற்க மறுத்து போராடி வெற்றியை பெற்றுத்தந்த அந்த மாணவர்களின் காலடியை தமிழினம் பணிகின்றது

அழிக்க அழிக்க வேராவோம்
துளிர்க்கும் அரும்பில் நாம் ஆள்வோம்

– திலகநாதன் கிந்துஜன்

Leave a Response