முதலமைச்சரையே விரட்டிய விவசாயிகள் – அரியானா மாநிலத்தில் பரபரப்பு

மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், டெல்லி எல்லையில் 47 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாசக அரசு பிடிவாதமாக இருப்பதால் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு நன்மை இருப்பதாக பாசக பரப்புரை செய்யத் தொடங்கியிருக்கிறது.அதன் ஒரு பகுதியாக வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்கி, கிராம மக்களிடையே பேச பா.சனதா மூத்த தலைவரும், அரியானா மாநில முதலமைச்சருமான மனோகர்லால் கட்டார் திட்டமிட்டார்.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்தில், ‘கிசான் மகாபஞ்சாயத்து’ என்ற பெயரில் நேற்று விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் மனோகர்லால் கட்டார் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதையும் மீறி நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று கைம்லா கிராமத்துக்கு ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். கையில் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி, பா.சனதா அரசுக்கு எதிராக முழக்கமிட்டுக்கொண்டு அவர்கள் முன்னேறிச் சென்றனர்.

காவல்துறையினரின் எதிர்ப்பை மீறி அவர்கள் விரைந்தனர். இதையடுத்து, அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

ஆனால், அதையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் கைம்லா கிராமத்தை நோக்கிச் சென்றனர். கிராம நுழைவாயிலில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். அவற்றைக் கடந்து சென்ற விவசாயிகள், ‘கிசான் மகாபஞ்சாயத்து’ நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தை அடைந்தனர். அங்கு போடப்பட்டிருந்த மேடையைப் பிய்த்து எறிந்தனர். அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

முதலமைச்சர் மனோகர்லால் கட்டாரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தையும் விவசாயிகள் கைப்பற்றினர்.இதனால் முதல்வரின் ஹெலிகாப்டர் அங்கு தரையிரங்காமலே திருப்பிவிட்டது.

இதனால் முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.

கடுங்குளிர் நேரத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் விவசாயிகளைத் தடுக்க முடியாமல் முதல்வர் நிகழ்ச்சியே இரத்தானது பாசகவினரை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது.

Leave a Response