2 மாநிலங்களிலும் வெற்றி முகம் – காங்கிரசு மகிழ்ச்சி பாஜக அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து, 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியன தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாலை 6 மணிக்கு அரியானா மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வெளியாகி உள்ளன.

இதன்படி ஜம்மு காஷ்மீரில், காங்கிரசு கூட்டணி 46 முதல் 50 இடங்களைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை வெற்றி பெறும். பிடிபி 7 முதல் 11 இடங்கள் வரை வெற்றி பெறும். இது தவிர, சுயேச்சை வேட்பாளர்கள் 4 முதல் 6 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என பீப்பிள் பல்ஸ் கருத்துகணிப்பு உட்பட பல கணிப்புகளில் கூறப்படுகிறது.

அனைத்துக் கருத்துகணிப்புகளிலுமே ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை காங்கிரசுக் கட்சியே ஆட்சி பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று (05.10.2024) காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் பாஜக தலைவரும், தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி, முன்னாள் முதலைமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, பாஜக முன்னாள் தலைவர் சாவித்ரி ஜிண்டால் என முக்கிய அரசியல் புள்ளிகள் போட்டியில் இருக்கிறார்கள்.

மாலை ஆறு மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் வெளியான கருத்துக் கணிப்புகளில் காங்கிரசுக் கட்சி 55 இடங்களையும், பாஜக 26 இடங்களையும், ஜேஜேபி 0-1 இடங்களையும், ஐஎன்எல்டி 2 முதல் 3 இடங்களையும் பெறலாம் என பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் பல கணிப்புகளிலும் காங்கிரசே வெல்லும் என்று வந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மற்றும் அரியானாவில் காங்கிரசுக்கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்திருப்பதால் அக்கட்சியினர் குதூகலமடைந்துள்ளனர்.ஆளும் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response