ஹிட்லரைவிட மோசம் நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறார் – எடப்பாடியை வெளுக்கும் டிடிவி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த பிறகும் அரசு உதவிப் பொறியாளர்களுக்கான ஊதியக் குறைப்பில் பழனிச்சாமி அரசு பிடிவாதம் காட்டுவது கொஞ்சமும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

அரசு எந்திரத்தில் பணிகளைத் தொடக்க நிலையில் தங்களின் தோள்களில் சுமந்து செயல்படும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்களுக்கு முதலமைச்சராக மட்டுமின்றி அந்தத் துறைகளின் அமைச்சராகவும் இருக்கிற பழனிச்சாமி நேரடியாக இழைத்திருக்கிற மிகப்பெரிய அநீதியாகும்.

உலகத்தில் வேறெங்கும் நிகழாத கொடுமையாக ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு ரூ 15,000/ வரை ஊதியத்தைக் குறைத்து ஹிட்லரைவிட மோசமானவராக முதலமைச்சர் பழனிச்சாமி நடந்துகொண்டிருக்கிறார்.அரசு உதவிப் பொறியாளர்களை தன் வழக்கமான பாணியில் நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்.

இவ்வளவு கோரிக்கைகள் எழுந்த பிறகாவது இதுகுறித்த தமது முடிவை பழனிச்சாமி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு உதவிப் பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தைத் திருத்தியமைத்து அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response