காவிரியில் வெள்ளம் கால்வாய்களில் தண்ணீர் இல்லை – இந்த அவலத்துக்கு இதுதான் காரணம்

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 16.08.2018 அன்று தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடந்தது.

பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட அக்கூட்டத்தின் கலந்தாய்வுக்குப் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று….

காவிரியிலும், கொள்ளிடத்திலும் வெள்ளம் வந்துள்ள நிலையில் கூட கால்வாய்களில் தண்ணீர் வராத அவலம் நடந்து கொண்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மட்டுமின்றி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உழவர்கள் இதைக் கண்டித்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கட்டளைவாய்க்கால், உய்யகொண்டான் உள்ளிட்ட பல கால்வாய்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்படாததால், மேடாகியும் புதர் மண்டியும் கிடக்கின்றன. வாய்க்கால்களும் மேடிட்டு, செடி கொடிகள் மண்டிக் கிடக்கிறது. இதனால், வெள்ள நீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் போக முடியாததால் மேற்கண்ட ஐந்து மாவட்டங்களிலும் வேளாண்மைக்குத் தண்ணீரின்றி உழவர்கள் போராடுகிறார்கள். கள்ளப்பெரும்பூர், வடுவூர் உள்ளிட்ட பல பெரிய ஏரிகள் நிரம்பவில்லை.

தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித்துறையின் செயலற்றத்தன்மையே இதற்கு முதன்மைக் காரணம்! அத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே இப்பாதிப்புக்கு நேரடி பொறுப்பாவார்!

தமிழ்நாடு அரசு, உடனடியாக நடப்பு சாகுபடிக்குப் பயன்படக் கூடிய வகையில், கடைமடை உட்பட எல்லா வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் தூர் வாரி செப்பனிட வேண்டும்.

அடுத்து, நிரந்தர பயனளிக்கக் கூடிய வகையில் காவிரி டெல்டா நீர் மேலாண்மையில் மாபெரும் மறுசீரமைப்புத் திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். கொள்ளிடத்தில், முக்கொம்பிலிருந்து கீழணை வரை உள்ள 107 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளபடி 7 கதவணைகள் அடுத்த சாகுபடி பருவத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்!

முக்கொம்பிலிருந்து கீழணை வரை 190 அடி அளவிற்கு நில அமைப்பு கீழ் நோக்கி சரிவாக உள்ளது நல் வாய்ப்பாகும்! அதேபோல், காவிரியில் தேவையான அளவுக்கு புதிய கதவணைகள் கட்ட வேண்டும். மேலும், கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி உள்ளிட்ட பல ஆறுகளில் அங்கங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். அனைத்து ஆறுகளையும் தூர் வாரி கரைகளை உயர்த்துவதுடன், கரைகளில் பக்கச் சுவர் எழுப்ப வேண்டும்.

இதற்கான திட்டத்தைத் தயாரித்து இந்திய அரசிடம் சிறப்பு நிதி பெற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு – காவிரிப்பாசன மறுசீரமைப்புக் கட்டுமானம் குறித்து, கள ஆய்வு செய்து விவரங்களைத் திரட்ட 3 உண்மை அறியும் குழுக்களை அமைக்க இருக்கிறது. இக்குழுக்கள் முக்கொம்பிலிருந்து கடற்கரை வரை பகுதிகளை பிரித்துக் கொண்டு, கள ஆய்வு செய்து, அந்த ஆய்வறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவுக்கு அளிக்கும். அவற்றின் அடிப்படையில், மாதிரி மறுசீரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response