காவிரியில் வெள்ளம் – கொள்ளிடம் இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் தற்போது 20வது தூணும் இடிந்து விழுந்து பாலம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது.

1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது. பாலத்தின் உத்தரவாத காலம் முடிந்ததும், இதன் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கடந்த சில நாட்களாக வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், நள்ளிரவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது.

18, 19, எண்ணுள்ள தூண்கள் அடுத்தடுத்து விழுந்து நீருக்குள் மூழ்கின. பழைய பாலம் உடைந்து விழுந்ததால் புதிய பாலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Leave a Response