ஈரோடு காவிரிக் கரைகளில் கடும் பாதிப்பு

காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஈரோடு மாவட்ட கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள பள்ளிபாளையம் பழைய பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்வண்டிப் பாலத்தை தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்வதால் பாலத்தின் மேல் செல்லும் போது தொடர்வண்டிகள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

லக்காபுரம் பகுதியில் வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்தது. பாசூர் பகுதியில் தென்னை மரங்களின் கொண்டை பகுதி மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்து ஓடியது. கணபதிபாளையம் அருகே உள்ள மன்னாதம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவில் மண்டபம் பகுதிவரை காவிரி தண்ணீர் புகுந்து உள்ளது.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி பகுதியில் கரையோரங்களில் உள்ள 600 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பரிகார மண்டபத்துக்குள் காவிரி தண்ணீர் புகுந்தது.

பவானிசாகர் அணையில் இருந்து நேற்று மாலை பவானி ஆற்றில் வினாடிக்கு 27 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் 50 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

கரூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களை சேர்ந்த 275 பேர் சமுதாயக்கூடம், பள்ளி உள்ளிட்டவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பல இடங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உத்தமர்சீலி தரைப்பாலத்தில் காவிரி தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கு சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை தோட்டம் தண்ணீரில் மிதக்கிறது. திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள மாந்தோப்பு, வாழைத்தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள தெருக்களில் காவிரி தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது. உறையூர் பகுதியில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Leave a Response