தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை என்னவானார்?

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று.

அதையொட்டி, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசனின் உணர்வுப் பதிவு….

என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி

இன்று கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பிறந்த தினம். அவரது பிறந்தநாளில் மாத்திரமல்ல; வருடத்தின் பெரும்பாலான நாட்களில் என் நினைவில் வந்து போவார். அந்த அளவுக்கு என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி.

இவரின் கவிதைகளால் மாத்திரமல்ல; இவரது கரகரப்பான கவித்துவக் குரலாலும் வசீகரிக்கப்பட்டவன் நான். எனது பள்ளிப் பருவத்தில் அயலில் உள்ள கோவில் வீதிகளில் இவரது கவியரங்கங்கள் நிகழும்போது தவறாமல் போய் இருந்து கேட்பேன். பின்நாளில் இவர் கவிதைகள் எழுதும்போது அருகே இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவன். கைதேர்ந்த ஒரு சிற்பக்கலைஞரான இவர் கவிதைகள் எழுதும்போது அழகான எழுத்தில் வெட்டாமல் கொத்தாமல் எழுதுவதைப் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும். கவிதை எழுதி முடிந்ததும் என்னை உரத்துப் படிக்கச் சொல்லி கண்மூடிக் கேட்பார். அவரது கவிதைக்கு முதல் ரசிகன் அவரே.

நான் சூழலியல் கட்டுரைகளை எழுதும்போது இவரது கவித்துவத் தமிழ் எனது மொழிநடையை செழிப்பூட்டுவதையும் இலகுபடுத்திச் செல்வதையும் நான் நன்கு உணரக்கூடியதாக இருக்கும். இதற்காக நான் இவருக்கு என்றும் கடன் பட்டுள்ளேன்.

யுத்தம் முடிவுற்ற கையோடு இவர் தனது துணைவியாரால் படையினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார். இன்று வரை என்னவானார் என்பது எவருக்கும் தெரியாது.

தினக்குரல் பத்திரிகைக்காக ஒருதடவை இவரை நான் நேர்காணல் செய்திருந்தேன். அப்போது, “எனது கவிதைகளுக்கான தேவையிருக்கும் வரை என்னைக் கொண்டாடுவார்கள். எப்பொழுது என் கவிதைகளின் தேவை இல்லாமல் போகிறதோ அப்போது காலம் என்னைக் கைவிட்டுவிடும்” என்று குறிப்பிட்டிருந்தார். இவரது கவிதைகளுக்கான தேவை இப்போதும் இருப்பதாகவே நான் அதிகம் உணர்கிறேன்.

Leave a Response