முத்தையா முரளிதரன் இனத்துரோகி அவர் அறிக்கையே சான்று – பெ.மணியரசன் விளக்கம்

முத்தையா முரளிதரன் இனத்துரோகி, அவர் அறிக்கையே அதற்குச் சான்று என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

இலங்கையின் மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்க அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “அப்பாவி மக்கள் படுகொலையை நான் ஆதரித்ததும் இல்லை. ஒருபோதும் ஆதரிக்கவும் மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

2009-இல் அப்பாவித் தமிழ் மக்களை பல்லாயிரக்கணக்கில் அன்றாடம் இராசபட்சேயின் சிங்களப் படை கொன்று குவித்ததை முத்தையா முரளிதரன் கண்டித்தாரா? ஏன் கண்டிக்கவில்லை? இப்பொழுது வெளியிட்ட அறிக்கையில்கூட அப்பாவி மக்களைக் கொன்றதைக் கண்டிக்கிறேன் என்று கூறவில்லையே, ஏன்?

அப்போது ஐ.நா.வின் பொதுச்செயலாளராக இருந்த பான்கிமூன் அமைத்த தாருஸ்மான் ஆய்வுக்குழு, 2009இல் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் படுகொலை செய்ததை “மனித குலத்திற்கு எதிரான குற்றம்” என்று வரையறுத்து, பன்னாட்டுப் புலனாய்வுக் குழு விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கூறியது.

இலங்கையில் அப்பாவிப் பொது மக்களுக்கு எதிராக நடந்த உயிர்க்கொலை மற்றும் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டு வல்லுநர்களையும் இணைத்துக் கொண்ட புலனாய்வுக் குழுவை இலங்கை அரசு அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015இல் தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசும் ஆதரித்து வாக்களித்தது.

இலங்கை அரசு தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றங்களை, உலகளாவிய பொது அமைப்புகள் கண்டித்ததுடன், புலனாய்வு செய்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கூறியள்ள நிலையில், முத்தையா முரளிதரன் இன்று வரை அந்த இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூட கண்டிக்கவில்லை.

“பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த போர் 2009 இல் முடிவடைந்ததால் – அந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று சொன்னேன்” என விளக்கம் கொடுத்துள்ளார் முரளிதரன். தாய்த்தமிழ் உறவுகள் – முதியோர், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக் கணக்கானோரை (ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோரை) சிங்களப் படைக் கொன்றழித்ததை – துக்க நாளாக முரளிதரனால் உணர முடியவில்லை. மகிழ்ச்சியான நாளாகத்தான் உணர முடிகிறது.

முரளிதரன் பிறந்த தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் கட்சி, சாதி, மதம், நாடு அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் துக்கம் கடைபிடித்தார்கள்! இன்றும் அந்தத் துக்கத்தைச் சுமந்து கொண்டுள்ளார்கள். ஆனால், இப்பொழுது வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூட முரளிதரன் மேற்கண்ட தமிழினப் படுகொலைக்காகத் துயரம் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

“இலங்கை அணியில் இடம் பெற்று மட்டைப்பந்து விளையாடியதால் என் மீது தவறான பார்வை கொண்டுள்ளார்கள்” என்று கூறுகிறார் முரளிதரன். அது உண்மையல்ல; இவர் இனப்படுகொலை பற்றி கூறிய கருத்துகளுக்காகவும் இலங்கையை சிங்களத் தீவு என்று சொன்னதற்காகவும், இராசபட்சேக்களைப் புகழ்ந்து கொண்டு இருப்பதற்காகவும்தான் இவரை எதிர்க்கிறோம்.

இப்படிப்பட்ட வன்னெஞ்சம் கொண்ட தமிழினத் துரோக முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விசய் சேதுபதி நடிக்கக்கூடாது என்ற எண்ணமே முரளிதரன் விளக்க அறிக்கைக்குப் பிறகு தமிழர்கள் நெஞ்சில் கூடுதலாக உறுதிப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு திரைப்படத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் இராசு அவர்களும் விசய் சேதுபதி முரளிதரன் வேடத்தில் நடிக்க வேண்டியதில்லை என்று வேண்டுகோள் வைத்தார்.

எனவே, முரளிதரன் வேடத்தில் அப்படத்தில் நடிக்கவில்லை என்று விசய் சேதுபதி வெளிப்படையாக அறிக்கை விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response