இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை…..

சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய பதவியைவிட்டு விலகியதோடு, நாட்டை விட்டும் வெளியேறியிருக்கிறார்.

நாடாளுமன்றம் கூடி புதிய குடியரசுத் தலைவராக ரணில் விக்ரமசிங்கேயைத் தேர்ந்தெடுத்துள்ளது.

தன்னைத்தவிர, வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாத ரணில். இராசபக்சேயின் ஆதரவுடன் தலைவர் பதவியை ஏற்றிருப்பதின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடாது. மேலும் பெருகவே செய்யும் இராசபக்சே ஆட்டுவித்தப்படி ஆடும் பொம்மையாக மட்டுமே இரணில் இருக்க முடியும். நாட்டு மக்களை வாட்டி வரும் பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்த பிறகு இராசபக்சே கும்பல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியே தீரும்.

இராசபக்சேயின் பின்னணியில் சீனா உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ உதவியையும், பொருளாதார உதவியையும் சீனா செய்துள்ளது. சீனாவின் பொருட்களை விற்பதற்கு இலங்கை ஒன்றும் பெரிய சந்தையல்ல.

இலங்கையினால் சீனாவுக்கு எந்தவிதமான பிரதிப் பயனும் கிடையாது. அப்படியிருந்தும் இலங்கைக்கு சீனா ஓடோடி வந்து உதவிகளைச் செய்தது ஏன்?

இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக நமக்கு இலங்கைப் பயன்படும் என்ற நோக்கத்துடனேயே சீனா இந்த உதவிகளை செய்தது; செய்துகொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலை இந்தியாவுக்கு மட்டும் அபாயமல்ல. மாறாக, இந்துமாக்கடலை தங்களது வணிகம், சுற்றுலாத் தொழில் போன்றவற்றுக்குப் பயன்படுத்திவரும் மேற்கு நாடுகளுக்கும் அபாயமாகும்.

ஈழத் தமிழர் பிரச்சனையும் இந்தியாவின் பாதுகாப்புப் பிரச்சனையும் வெவ்வேறானவையல்ல. இரண்டுமே பின்னிப்பிணைந்து இணைந்திருக்கின்றன. ஒன்றைத் தவிர்த்துவிட்டு மற்றொன்றை நிறைவேற்றிவிட முடியாது என்பதை இந்திய அரசும், மேற்கு நாடுகளும் உணரவேண்டும்.

இலங்கையில் மூண்டெழுந்துள்ள சிங்கள மக்களின் புரட்சித் தீயை அணைப்பதற்கு இராசபக்சேவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்தே தீரும். இவ்வளவு பாடுபட்டு கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டியுள்ள சினா அவ்வளவு சுலபமாக இலங்கையைவிட்டு வெளியேறிவிடாது.

இந்த உண்மையை எவ்வளவோ விரைவில் இந்திய அரசு புரிந்துகொள்கிறதோ அந்தளவுக்கு இந்தியாவுக்கும்நல்லது ஈழத் தமிழருக்கும் நல்லதாகும்.

Leave a Response