தமிழுக்குச் சங்கம் வைத்துத் தொண்டாற்றிய அறிஞருக்கு அருட்சோதி விருது

 

இராமலிங்கர் பணிமன்றம் ஏவி.எம்.அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி பொன்விழாக் கொண்டாட்டம் ஏவி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தொடங்கியது.

இராமலிங்கர் பணி மன்றத் தலைவர் டாக்டர் மா. மாணிக்கம் இளைஞர்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்கும் விதமாக பணி மன்றத்தின் சார்பில் மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு, மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அருட்செல்வரின் நினைவாக தொடங்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு மையத்தின் சார்பில் இனி வருடந்தோறும் நூல்கள் வெளியிடப்பட்டு திறனாய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக இவ்வாண்டு அப்துல் கலாம் அவர்களின் நூல் உட்பட ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளன. வள்ளலார், காந்தி ஆகியோரின் கருத்துக்களை பரப்பும் விதமாகவே இராமலிங்கர் பணிமன்றம் செயல்பட்டு வருவதாகவும், குடியரசுத் தலைவர், துணைவேந்தர்கள், அறிஞர்கள், சான்றோர், போன்ற பலர் கலந்து கொண்டு, பொருளாதாரம், எரிபொருள் மேலாண்மை, நதிநீர் இணைப்பு, கலை, இலக்கியம், தமிழ் வளர்ச்சி எனப் பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் இளைஞர்கள் மத்தியில் இக்கருத்துக்களை பரப்பும் வண்ணம் செயல்படும் என தெரிவித்தார்.

விழாவில் தமிழுக்குச் சங்கம் வைத்துத் தொண்டாற்றிய அறிஞர் வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்களுக்கு அருட்சோதி காந்திய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விழாவில் மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலர் திரு இராகவன் அவர்கள் தலைமை வகித்தார். அவர், அருட்செல்வர் அவர்கள் மேல் உள்ள அன்பு, மரியாதை மற்றும் அவரின் நினைவாக மாணிக்கம் அவர்களும் உடன் இருப்போரும் எடுக்கும் சீரிய முயற்சிகளுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே கலந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

நம்நாட்டில் சாதனையாளர்கள் உருவாக வேண்டுமானால் பாராட்ட வேண்டியவர்களை பாராட்ட வேண்டும். பிற நாடுகளில் அனைவரையும் ஊக்குவித்து பல சாதனைகளை செய்யத் தூண்டுகிறார்கள் எனவும் கூறினார். இராமலிங்கர் பணி மன்ற விழாவுக்கு அருட்செல்வரின் அழைப்பு சுனாமியைப் போன்ற உணர்ச்சியை தூண்டுவதாகத் தெரிவித்தார். அருட்செல்வர் அரசியல், இலக்கியம், தொழில், பொதுப்பணி போன்ற எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். அவர் தென்னகத்து காந்தியாகவே தாம் பார்த்ததாகவும் கூறினார். மேலும், தீமைகள் பெருகக் காரணம், நல்லவர்கள் தீமையைக் கண்டு அஞ்சுவதுதான் தான் காரணம் எனவும், வெள்ளையனின் துப்பாக்கிக்கு நெஞ்சைக் காட்டிய நாம், தவறுகளை தட்டிக் கேட்கத் தயங்குகிறோம் என வருந்தினார்.

விழாவில் வெளியிடப்பட்டது. மண்டல அளவில் இராமலிங்கர் பணி மன்ற போட்டிகளை நடத்த உதவிய எட்டு நிறுவனங்களுக்கு பாராட்டுக் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் முனைவர் ஒளவை நடராஜன், ஊரன் அடிகளார், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Leave a Response