
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்தை கொச்சைப்படுத்தக்கூடாதென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் கோண்டூரில் உள்ள டி.எஸ்.பி விஷ்ணுபிரியா வீட்டிற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழக்கிழமை சென்றார். அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா இறப்பு மூலமாக காவல்துறையிலுள்ள நேர்மை சாகடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபிரியா இறந்து கிடந்த போது அங்குச்சென்ற காவல் கண்காணிப்பாளர் அவர் இறந்த அறைக்குள் செல்லாமலே விஷ்ணுபிரியா கையில் கடிதம் இருப்பதாக கூறியுள்ளார். அவரின் கால்கள் தரையில் தட்டிய நிலையில் இருந்துள்ளன. உடலில் காயங்களும் இருந்ததாக பெற்றோர்கள் கூறுகிறார்கள். எனவே, உரிய விசாரணை நடத்திட வேண்டும்.
மேல் அதிகாரியின் அழுத்தம் காரணம் என்ற கூறப்பட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை வேறு இடத்திற்கு இடமாற்றம் கூட செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் காதல் தோல்வி என்று அவரது மரணத்தை திசை திருப்பி கொச்சைப்படுத்தும் நிலை தான் உள்ளது. இதனை ஏற்க முடியாது.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறை இருந்தபோதிலும் விசாரணை சரியாக நடக்கவில்லை. எனவே, தான் மத்திய புலனாய்வு பிரிவின் (சிபிஐ) விசாரணை கோருகிறோம். கடந்த காலங்களில் சிபிஐ விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிடவில்லையா.
மற்றொரு டிஎஸ்பி மகேஸ்வரியின் வாக்குமூலத்தின் மூலமாக காவல்துறையினர் வரிவசூல் செய்யும் தண்டல்காரர்கள் போல் தான் உள்ளனர். விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிலை இனிமேல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்துக்கட்சியினரும் சிபிஐ விசாரணை கோருவதால் அதனை முதல்வர் செயல்படுத்த வேண்டும் என்றார்.


