
1974இல் அன்றைய திமுகழக அரசால் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டது. மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1974 முதல் 1980 வரை முழுமையாக உழைத்தும் பாவாணர் அவர்களால் “ஆசைமொழி” வரைதான் எழுத முடிந்தது. 1981 இல் பாவாணர் மறைந்தார். அதன்பின் 1985 ஜனவரியில் அவர் உருவாக்கிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது.
1989இல் அரசு அகரமுதலித் திட்டத்திற்கு அளித்த ஊக்கம் காரணமாக இரண்டாம் தொகுதி உருவாக்கப்பட்டது. 1991 ஜனவரியில் திமுக அரசு கலைக்கப்பட்டதன் காரணமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டு, இந்த இரண்டாம் தொகுதி நூல் 8.5.1992இல் தான் வெளியிடப்பட்டது.
13.5.1996இல் அகரமுதலி உருவாக்கும் திட்டம் முடுக்கி விடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மூன்றாம் பாகம் உருவாக்கப்பட்டு, 25.2.1997இல் வெளியிடப்பட்டது. “அ” முதல் “ஒள” வரையிலான சொற்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகிவிட்டன. மேலும் நான்கு, ஐந்தாம் பாகங்களும் வெளிவந்துவிட்டன.
இப்போது, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் ஆவண எழுத்தர், கணினி தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35 (தாழ்த்தப்பட்ட-பழங்குடியினருக்கு) ஆகும். பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 ஆகவும், இதர வகுப்பினருக்கு 30 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி உள்ளவர்கள் வெள்ளைத்தாளில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்டி, பெயர், முகவரி, பிறந்த நாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். மேலும், தேவையான சான்றிதழ்களின் நகல்களைச் சுயசான்றொப்பத்துடன் இணைத்து அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை, நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ, “இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், சி-48, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், 2-வது நிழற்சாலை, அண்ணாநகர், சென்னை-40′ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களை 044-26215023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


