மருத்துவப் படிப்பில் சேர நீட் எனும் புதிய தேர்வை அறிவித்தது பாஜக அரசு. அதற்கு நாடு முழுதும் கல்வியாளர்களும் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதைத் திரும்பப் பெறவில்லை. இதனால் தமிழகத்தில் பல திறமை வாய்ந்த மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் தொடர்கிறது.
1.9.2017 அன்று அரியலூர் மாவட்டம் குழுமூரைச்சார்ந்த அனிதா என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
5.6.2018 அன்று பிரதீபா என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரை சார்ந்தவர் மாணவி பிரதீபா.
திருப்பூரை சார்ந்த ரிதுஶ்ரீ என்னும் மாணவியும் பட்டுக்கோட்டையை சார்ந்த வைஸ்யா என்னும் மாணவியும் கடந்த 5.6.2019 அன்று ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
6.6.2019 அன்று மரக்காணம் கூனிமேடுகுப்பத்தை சார்ந்த மோனிஷா நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.
19.8.2020 அன்று கோவையை சார்ந்த மாணவி சுபஶ்ரீ நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள எலந்தங்குழியை சார்ந்த விக்னேஷ் என்னும் மாணவர் கடந்த 9.9.2020 அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மாணவர்கள் மீளாத நிலையில் நாளை (செப்டெம்பர் 13) நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் மதுரையில் இன்னொரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை(செப்.13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.