கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுத 10 புதியவிதிமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது

கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வை ஒட்டி, மத்திய அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த, திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

1. தொற்று அறிகுறி கொண்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தித் தேர்வெழுத வழங்கும் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. பதிலாக அறிகுறியை உடைய மாணவர்கள் அருகில் உள்ள சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மாணவர் எப்போது உடல் ரீதியாகத் தகுதிபெற்றவராக அறிவிக்கப்படுகிறாரோ அப்போது தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

2. எனினும் அத்தகைய மாணவர்களைத் தேர்வெழுத அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள திட்டப்படி, தேர்வுகளை நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்யலாம்.* கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வசிக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வர்களுக்கும் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை. அவர்களுக்குப் பின்னர் ஒரு தேதியில், தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

3. முகக்கவசம், சானிடைசர்கள், சோப், சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் ஆகியவற்றைக் கல்வி நிறுவனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.

4. ஆசிரியர்களும் தேர்வர்களும் தங்களுடைய உடல்நிலை குறித்து சுய அறிவிப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் தேர்வு மையங்களுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதியில்லை.

5. தொற்று அறிகுறி இல்லாத ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மட்டுமே தேர்வறைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம்.

6. தேர்வறைக்குள் முகக்கவசத்தைக் கழற்றாமல் அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும்.

7. தேர்வு மையங்களுக்குள் கூட்டம் ஏற்படுவதை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும்.

8. பேனா- தாள் சார்ந்த தேர்வுகளுக்கு, கேள்வித்தாள்களையும் விடைத்தாள்களையும் கொடுப்பதற்கு முன்னால், கண்காணிப்பாளர் தன் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல அவற்றை வாங்கும் முன் மாணவர்களும் தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும்.* வினா, விடைத்தாள்களை விநியோகிக்கும் முன்னரும் எண்ணிப் பார்க்கும்போதும் எச்சில் தொட்டுப் பணியைச் செய்வது கூடாது.

9. விடைத்தாள் சேகரிப்பு, பேக்கிங் என ஒவ்வொரு கட்டத்திலும் கைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சமாக 72 மணி நேரங்களுக்குப் பிறகே விடைத்தாள்களைப் பிரிக்க வேண்டும்.

10. தேர்வின்போது தேர்வர்களுக்கோ, ஆசிரியருக்கோ கரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டால், அவரைத் தனிமைப்படுத்துவதற்கெனத் தனியாக ஓர் அறை அருகிலேயே இருப்பது அவசியம்.

இவ்வாறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response