உதயநிதி செய்த ட்வீட்டால் நிகழ்ந்த கைது நடவடிக்கை

கோவை ஹோப்காலேஜ் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (31). மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக, மாநகராட்சி நிர்வாகத்தினர் இவரது வீட்டை தனிமைப்படுத்தினர்.

இந்நிலையில், இளவரசன், “எனது குடும்பத்துக்குத் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்ட போது, கொரோனா இல்லை என முடிவுகள் வந்தன. ஆனால், எங்களுக்குக் கொரோனா இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்” எனக் கூறி மாநகராட்சியை கிண்டல் செய்யும் விதமாக தனது வீட்டின் முன்பு கடந்த 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) பிளக்ஸ் பேனர் வைத்து இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மாநகராட்சியின் கொரோனா பரிசோதனை நடைமுறைகளை சந்தேகத்துக்குள்ளாக்கியது.

இதைத் தொடர்ந்து மறுநாள், இளவரசனுக்குக் கண்டனம் தெரிவித்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டனர். அதில், “மேற்கண்ட இளவரசனின் மனைவிக்குக் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி கொரோனா உறுதியானது. அவர் கொடிசியா மையத்தில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அவர்களது குடும்பத்தினர் ஒத்துழைப்புத் தராததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் 14 நாட்கள் அவர்கள் வெளியில் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

தடையை மீறி இளவரசன், தன் தந்தையை வேடப்பட்டியில் இருந்து தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 25 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரது தந்தை உயிரிழந்தார். 27 ஆம் தேதி மேற்கண்ட பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி, 2 மகள்கள், தாய் ஆகியோருக்குக் கொரோனா இருப்பது உறுதியானது.

மாநகராட்சி அறிவுறுத்தியும், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இச்சூழலில், கடந்த 4 ஆம் தேதி தடையை மீறி தனியார் ஆய்வகத்துக்குச் சென்று பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என சான்று பெற்று, மாநகராட்சியைக் கண்டித்து பேனர் வைத்துள்ளனர்.

மேற்கண்ட இளவரசன், ஆரம்பத்தில் இருந்தே மாநகராட்சியின் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. பொதுமக்களுக்கு நோய் பரப்பும் விதமாகச் செயல்பட்டதாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மாநகராட்சி அனுமதி பெறாமல், நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாலும் அவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இளவரசனின் மேற்கண்ட செயலுக்கு கண்டனமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், இளவரசன், அவரது மனைவி ஆகியோர் மீது 270, 261 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில், இளவரசன் நேற்று (செப்டெம்பர் 10) இரவு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இளவரசன் வைத்த பேனரை தன் ட்விட்ட்ரில் பகிர்ந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி,

அமைச்சருக்கு COVID-19 வந்தால் நெகட்டிவ் என புளுகுவது. அதுவே சாமானியர்களுக்கு நெகட்டிவ் என்றால் பாசிட்டிவ் என பொய் சொல்லித் தட்டி வைத்து கமிஷன் அடிப்பது. கொரோனா பேரைச் சொல்லி அடிமைகள் அடிக்கும் கொள்ளையைப் பார்த்து கொரோனாவே ஓடினால் தான் உண்டு எனத் தமிழகமே புலம்புவது வேதனை தருகிறது.

என்று சொல்லியிருந்தார்.

அவர் அந்த பேனரை பகிர்ந்து விமர்சனம் செய்ததன் விளைவுதான் கோவை மாநகராட்சி அறிக்கையும் அதன் தொடர்ச்சியாகக் கைது நடவடிக்கையும் என்கிறார்கள்.

Leave a Response