விநாயகர்சிலை விவகாரம் – தமிழக அரசின் புதிய அறிவிப்பு

தமிழகத்தில் விநாயகர் சிலைகளைப் பொதுஇடங்களில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு….

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.07.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி மதம் சார்ந்த விழாக்கள், கூட்டுவழிப்பாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படியும் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர்சிலைகள் அமைப்பதையும் பொதுஇடங்களில் வழிபாடு நடத்துவதையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் பொதுமக்கள் நலன்கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றமும் அரசின் ஆணையைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

எனவே, மத்திய மாநில அரசுகளின் ஆணைகளையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கோரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசு எடுத்து வரும் முழுஒத்துழைப்பை நல்க வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response