எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்டமன்ற கதாநாயகன் இரகுமான்கான் மறைந்தார்

தமிழக முன்னாள் அமைச்சர் இரகுமான்கான் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் திமுக ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். அதோடு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் இரகுமான் கான் பதவி வகித்தார்.

இரகுமான் கான், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 1977, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர். 1989-ல் சென்னை பூங்காநகர், 1996-ல் ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர். இப்படி 5 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த இரகுமான்கான், 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இருந்தார். தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணை தலைவராக இருமுறை பதவி வகித்தார்.

தேனி மாவட்டம் கம்பம் தான் இவரது சொந்த ஊர். இரகுமான்கானின் சட்டமன்றம் மற்றும் மேடைப் பேச்சுகளைக் கேட்பதற்கென்றே பெருங்கூட்டம் இருந்தது.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் தன்பேச்சுகளின் மூலம் ஆளுங்கட்சியைத் திணற அடித்தவர். அதன் காரணமாக சட்டமன்ற கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்டவர் இரகுமான்கான்.

1977 இல் எம்.ஜி.ஆர் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த சமயத்தில் பிரதான எதிர்கட்சியாக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் ஆட்சியாளர்களைக் கதி கலங்க வைத்தார்கள். அவர்கள் க.சுப்பு, துரைமுருகன் மற்றும் இரகுமான்கான் ஆவர்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் கால சட்டமன்றத்தில் இவர்கள் மூவரும் பேசியது அன்றைய பத்திரிகைகளில் பெரிதாகப் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response