மராட்டியத்தில் இன்று முதல் தமிழகத்தில் எப்போது? – மக்கள் ஏக்கம்

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் 18 ஆம் தேதி முதல் மராட்டிய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) தனது சேவையை நிறுத்தியது.

ஆனாலும் ஊரடங்கால் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் ஊர் திரும்பும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர்த்து மே 22 ஆம் தேதி முதல் எம்.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. மேலும் மும்பை பெருநகர பகுதிக்குள் (மும்பை, தானே, பால்கர் மாவட்டங்கள் இடையே) தனியார் ஊழியர்கள் பணிக்குச் சென்று வர வசதியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் அவசரத் தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

பேருந்துப் போக்குவரத்தை முழுமையாகத் தொடங்க வேண்டும் என்று பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான பகுஜன் விகாஷ் அகாடி கட்சியும் போராட்டம் நடத்தி வந்தது.

இந்தநிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வாக மாவட்டங்களுக்கு இடையே இன்று(வியாழக்கிழமை) முதல் பேருந்துப் போக்குவரத்தை தொடங்க எம்.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான சேகர் சன்னே கூறுகையில்,

மாவட்டங்களுக்கு இடையே எம்.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி பேருந்து சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்கத் திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

பேருந்துப் போக்குவரத்து தொடங்கும் நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி, பயணிகள் இ-பாஸ் எடுக்கத் தேவையில்லை. வேறு எந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் கொரோனா பரவல் தடுப்புக்காக எடுக்க வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து புனே போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி தியானேஸ்வர் கூறுகையில், அரசு அனுமதியை அடுத்து போக்குவரத்துக் கழகத்தின் புனே பிரிவின் சார்பில் பேருந்து சேவையைத் தொடங்கத் தயாராகி உள்ளோம். புனேயில் இருந்து மும்பையின் தாதர், போரிவிலி மற்றும் தானே, நாசிக், பண்டர்பூர், ஜல்காவ், கோலாப்பூர், அவுரங்கபாத், நாசிக், சோலாப்பூர் ஆகிய வழித்தடங்களில் காலை 7 மணி முதல் பேருந்துகளை இயக்க உள்ளோம். ஒவ்வொரு பேருந்திலும் 22 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார்.

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்துக் கழகமான எம்.எஸ்.ஆர்.டி.சி.க்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இருப்பதும், சுமார் 1 இலட்சம் பேர் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தினமும் சுமார் 65 இலட்சம் பயணிகள் எம்.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளில் பயணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு மாவட்டங்கள் இடையே பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்படுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்திலும் இபாஸ் நடைமுறையை ஒழித்து பேருந்துப் போக்குவரத்து தொடங்கவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்புள்ள மாநிலமான மராட்டியத்திலேயே இபாஸ் இல்லாமல் பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. அதுபோல தமிழகத்திலும் உடனே தொடங்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

Leave a Response