கி.வெங்கட்ராமன் சொன்ன ஆபத்து வந்துவிட்டது அரசு விழிக்குமா?

மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் குறைந்த வட்டியில் பொது நகைக்கடன், விவசாய நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் வழங்கப்பட்டு வந்த நகைக் கடன்கள் பெரும் உதவியாக இருந்தது.

இந்தநிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களை மறு உத்தரவு வரும் வரையிலும் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவர்கள் நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் முன்னறிவிப்பு இன்றி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடே இவ்வறிவிப்பு என்று சொல்லப்படுகிறது.

ஜூன் மாதம் 26 ஆம் தேதி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இனி கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குச் சென்ற பிறகு நகைக் கடன் வட்டி உயர வாய்ப்பிருக்கிறது. சேமிப்பு கணக்கிற்கு வட்டியும் குறைந்து, வாங்கும் கடனுக்கு வட்டி அதிகரித்து, எளிய மக்கள் அவதிப்படும் நிலைதான் ஏற்படும் என்று சொல்லியிருந்தார்.

அவர் சொன்ன ஆபத்து ஒரு மாதத்துக்குள்ளாகவே வந்துவிட்டது.

அதே அறிக்கையில், மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் இந்த அவசரச் சட்ட முடிவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதனை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவர் சொன்ன மாதிரியே நடந்திருக்கும் நிலையில் இப்போதாவது தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Response