கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில்….
இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ள கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து,22.03.2020 அனைத்திந்திய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. வரும் மார்ச்சு 31 ஆம் நாள் வரை அனைத்திந்திய அளவில் தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுருமிருந்து 75 மாவட்டங்களை இதர பகுதிகளிலிருந்து துண்டித்து, தனிமைப்படுத்த வேண்டுமென இந்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் உள்ளன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் வரும் மார்ச்சு 31 ஆம் நாள் வரை முழுமையான பணி முடக்கம் செயலாக்கப்படவுள்ளது. போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவினாலும், இம்முடக்கம் காரணமாக எழும் சமூகப் பொருளியல் சிக்கல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து, கடந்த 19.03.2020 அன்று அறிக்கை வெளியிட்ட நாம், இப்பொருளியல் முடக்கம் காரணமாக பாதிக்கப்படும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியம் வழங்க வேண்டுமெனவும் அறிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது.
ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டு மொத்தப் பொருளியல் நடவடிக்கைகளும் முடங்கியுள்ள இச்சூழலில், இவற்றால் பாதிக்கப்படும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, அதனைத் தட்டிக் கழிப்பது சரியல்ல.
எனவே, தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஆகும் அதிகபட்ச செலவான 13,000 கோடி நிதியை – தேசியப் பேரிடர் கால உதவியாக இந்திய அரசு 75 விழுக்காடும், தமிழ்நாடு அரசு 25 விழுக்காடும் எனப் பகிர்ந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், இந்தப் பேரிடர் காலத்தில் ரேசன் கடைகளில் வழக்கமாக வழங்கும் விலையில்லா அரிசிக்கு மேலாக, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அரிசியை மானிய விலையில் ரூபாய் மூன்றுக்கு வழங்க வேண்டும். மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவை பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.
அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிறுதொழில்களுக்கு இடர்நீக்க நிதி வழங்குவதுடன், அவர்களது மின்சாரக் கட்டணத்திற்கும் சலுகை வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.