பெங்களூருவைப் பின்பற்றி ஊரடங்கைக் கைவிடுங்கள் – தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

கொரோனா காரணமாக மார்ச் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு இன்னும் நீடிக்கிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மூத்த இதழாளரும் சமுதாயச் செயற்பாட்டாளருமான வளர்தொழில் ஜெயகிருட்டிணன் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில்….

ஊரடங்கை உடனடியாக கைவிட வேண்டும். இனியும் ஊரடங்கை நீடித்துக் கொண்டே போனால் மக்கள் இன்னும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாவார்கள்.

வேலைக்குப் போக முடியாததால் இப்போதே மூன்று வேளை உணவு கூட கிடைக்காமல் மக்கள் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஒரு நாளில் ஆளுக்கு ஒரு வேளை என்று குழந்தைகளுக்கு முறை வைத்து உணவு கொடுக்கும் நிலை வந்து இருப்பதை கேள்விப்படும்போது யாருக்கும் மனது வலிக்காமல் இருக்காது.

போதாததற்கு நாடு முழுவதும் சில காவலர்கள் தங்களிடம் கிடைத்தவர்களை எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக அடித்து கொடுமைப் படுத்துகிறார்கள். அது தந்தை, மகன் என இரண்டு வணிகர்களை அடித்துக் கொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது. அம்மா கதறக்கதற பத்து வயது கூட நிரம்பாத சிறுவனைஅடித்து இழுத்துச் செல்கிறார்கள்.

நோயைத் தடுத்துக் கொள்ளும், நோய் வந்தால் சிகிச்சை பெறும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினால் போதும், அவர்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

கொரோனா பெயரில் மக்களை இப்படி துன்புறுத்தாதீர்கள். நோய்த் தொற்றையும் ஊரடங்கால் குறைக்க முடியவில்லை. முதல்வர் அவர்களே, அருள்கூர்ந்து பெங்களூருவைப் பின்பற்றி ஊரடங்கைக் கைவிடுங்கள்; மக்களைக் காப்பாற்றுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response