2036 வரை அதிகாரத்தில் இருக்க ரசிய அதிபர் புடின் செய்யும் வேலைகள்

ரஷியாவில் அதிபரின் பதவிக் காலம், 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், 2 முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். அதன்படி, 2008 வரை, 2 முறை தொடர்ந்து அதிபராக இருந்த, புதின், அதன் பின்னர் பிரதமராகப் பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து 2012-ல் மீண்டும் அதிபர் பொறுப்புக்கு வந்த அவர், 2018 அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

அவரது பதவிக் காலம், 2024-ல் முடிகிறது. அதன் பின்ன்ர் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்த நாட்டின் சட்டத்தில் இடமில்லை.

இந்த நிலையில், அரசியல் சாசன சட்டத் திருத்தங்கள் மூலம் பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தப் போவதாக, கடந்த ஜனவரியில், புதின் அறிவித்தார்.

அதன்படி, அரசியல் சாசனச் சட்டத் திருத்த மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், ஓய்வூதியத்திற்கு உறுதிமொழி வழங்குவது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், ரஷிய அதிபர் பதவி காலத்திற்கான வரம்பை தளர்த்துவது ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.

இந்த மசோதா சட்டமானால் 2024 மற்றும் 2030-ல் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் புதின் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இருக்காது.

அதன்படி இந்த 2 தேர்தல்களிலும் புதின் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் 2036 வரை, அதாவது, அவரது, 83வது வயது வரை, அதிபராகப் பதவி வகிக்கலாம்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து தொடர்ந்து அவர் வெற்றி பெற்று வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் போட்டியிடுவதற்கான தடையைத் தாமே அகற்றிக் கொண்டதன் மூலம் அவர் தொடர்ந்து அதிபராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டும் ஒப்புதல் அளித்துவிட்டது. அதிபர் புதினும் இந்த மசோதாவில் கையெழுத்துப் போட்டு விட்டார்.

எனினும் இதை சட்டமாக்குவதற்கு முன்பு மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த புதின் விரும்புகிறார் என்று சொல்லப்பட்டது.

சட்டப்பூர்வமாக இது தேவையில்லை என்றாலும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதில் ஜனநாயகத்தை பொறுப்பை உறுதி செய்ய பொதுவாக்கெடுப்பை நடத்த புதின் முடிவு செய்தார் என்றும்,அதனால், ஏப்ரல் மாதம் 22-ந் தேதியை வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது ஜூலை 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பொது வாக்கெடுப்புக்கு இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் மக்களின் கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஜூலை 1-ந் தேதி வரை இந்த வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோரோனோ வைரஸ் பாதிப்பில் ரஷியா தொடர்ந்து 3வது இடத்தில் இருந்து வரும் இந்த வேளையில் வாக்கெடுப்பை நடத்துவது பாதுகாப்பற்றது என்றும் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

அதனை மறுக்கும் ரஷிய அரசு வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளதாக மக்களுக்கு உறுதியளித்துள்ளது.

தாமே தொடர்ந்து அதிபராக இருக்கவேண்டும் என்பதற்காக புதின் செய்துவரும் வேலைகள் உலகத்தின் பல நாட்டுத் தலைவர்களுக்கும் அந்த ஆசையை ஏற்படுத்தியுள்ளதென்று சொல்லப்படுகிறது.

Leave a Response