மதுவிற்பனைக்குப் பதிலாக பால் விற்றால் 40 ஆயிரம் கோடி கிடைக்கும் – பெ.ம சொல்லும் புதியகணக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், இன்று (23.05.2020) காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, இரெ. இராசு, க.அருணபாரதி, வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, க.விடுதலைச்சுடர், ம.இலட்சுமி அம்மாள், தை.செயபால், க.முருகன், முழுநிலவன் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், குடந்தை தீந்தமிழன், தமிழ்த்தேசியன், தஞ்சை இலெ.இராமசாமி,பூதலூர் தென்னவன், திருச்சி வே.க.இலக்குவன், மதுரை அருணா, சிவா, கதிர்நிலவன்,கோவை இராசேந்திரன், ஓசூர் ப.செம்பரிதி, சுப்பிரமணியன், சென்னை வெற்றித்தமிழன், வி.கோவேந்தன், இளங்குமரன், சிதம்பரம் சிவா, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு, புதுச்சேரி இரா.வேல்சாமி, மகளிர் ஆயம் அருணா, மேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அண்மையில் மறைவுற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி செயல்பாட்டாளர்
தோழர் மதியழகன், பொதுக்குழு தோழர் குபேரன் தந்தை புலவர் ஆதிமூலம்,
குடந்தை தோழர் வளவன் தாயார் திருவாட்டி கோ.அம்சவல்லி, தஞ்சை ஓவிய ஆசிரியர் இளங்கோ ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை
உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்!

கொடிய கொரோனா நச்சுயிரிக் கொள்ளை நோயைக் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தடுத்து நிறுத்த முடியாது, அதனுடன் எச்சரிக்கையாக வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று இந்திய அரசு கூறிவருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு வெளிநாட்டுத் தொடர்பு அல்லது வெளி மாநிலத் தொடர்பேதான் காரணமாக இருந்துள்ளது. வரைமுறையின்றி வெளிமாநிலங்களின் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் குவிந்துள்ளார்கள்.இவர்கள் அனைவரையும் அவரவர் மாநிலத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

அதேபோல் வெளி மாநிலங்களில் வேலை செய்யப் போய் சிக்கிக் கொண்ட தமிழர்கள் அனைவரையும்
உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும். இதற்கான சிறப்புத் தொடர்வண்டிகள் ஏற்பாடு செய்வதில் தமிழ்நாடு அரசு உரிய ஆர்வம் காட்டாமல் உள்ளது.

எடுத்துக்காட்டாக, மராட்டியத்தில் சிக்கியுள்ள இரண்டு இலட்சம் தமிழர்கள் தமிழ்நாடு திரும்பிவிடத் தவியாய்த் தவிக்கிறார்கள். மராட்டியத்தில் சிக்கியுள்ள ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், உ.பி., ம.பி., இராசஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, அந்தந்த மாநில அரசுகள் சிறப்புத் தொடர்வண்டி ஏற்பாடு செய்து அழைத்துச் செல்கின்றன.

ஆனால், தமிழர்கள் மட்டும் நாதியற்றவர்களாய்த் தவித்துக் கொண்டுள்ளார்கள். அண்மையில், வெளி மாநிலத்தவரை அழைத்துச் செல்ல ஏராளமான தொடர்வண்டிகள் மும்பைக்கு வந்தன என்றும், அதில் தமிழர்களை சென்னைக்கு அழைத்துச் செல்ல ஒரு தொடர்வண்டிகூட வரவில்லை என்றும் மும்பைத் தமிழர்கள் கூறுகிறார்கள்.

மராட்டியம் உட்பட வெளிமாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளிகளாக சிக்கிக் கொண்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக சிறப்புத் தொடர்வண்டிகள் மூலம் தமிழ்நாடு அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

தன் பிள்ளைகளை மீட்கும் ஒரு தாயின் கடமையைப் போல் தமிழ்நாடு அரசு இப்பணியைச் செய்ய வேண்டும்.
இதற்குத் தேவையான செலவுத் தொகை அனைத்தையும் இந்திய அரசிடம் வாதாடி, வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பெற வேண்டும். ஆண்டுக்கு மூன்று இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பல வகைகளில் தமிழ்நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளும் இந்திய அரசு, பேரிடர் காலத்தில் உரிய அளவில் நிதி உதவி செய்யாமல் கல் நெஞ்சத்தோடு ஒதுங்கிக் கொள்கிறது.

பிரித்தானியக் காலனி ஆட்சியில் கூட தமிழ்நாடு (சென்னை மாகாணம்) இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதில்லை!
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கும், தமிழ்நாட்டில் தங்கியுள்ள புலம் பெயர் தொழிலாளிகளை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் ஆகும் செலவுகள் அனைத்தையும் இந்திய அரசே ஏற்க வேண்டும்.

கொரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவைப்படும் நிதி அனைத்தையும் இந்திய அரசு தமிழ்நாடு அரசுக்குத் தாராளமாக வழங்க வேண்டுமென்றுதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2

வெளிமாநிலத் தொழிலாளிகளை
நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும்!

இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த உலக “ஒழுங்குகளை” கொரோனா கொள்ளைத் தொற்றுநோய் புரட்டிப் போட்டுவிட்டது. “உலகமயம்” என்ற கவர்ச்சிப் பெயருடன் உலாவந்த பன்னாட்டுப் பெருங்குழுமங்களின் உலக வேட்டைமயத்தைத் தடுக்கப் பல நாடுகள் இனி,கதவைச் சாத்தப் போகின்றன. தன் தேசம், தன் மக்கள் பாதுகாப்பு என்ற உணர்வு உலக நாடுகளில் வளரப் போகிறது.

ஆயுத வல்லரசுகளான அமெரிக்கா – சீனா – இரசியா நாடுகளிடையே முரண்களும் மோதல்களும் வளரப் போகின்றன. கொரோனா எல்லா நாடுகளிலும் மனித உயிரிழப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை. பொருளியல்
அடித்தளத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது.

இந்தப் புதிய நெருக்கடியைச் சந்திக்க வழக்கம்போல், ஆயுத வல்லரசுகள் உலக நாடுகளை தங்களுக்கு ஆதரவாக அணி பிரித்துக் கொள்வதிலும், போர் நடவடிக்கைகளிலும் இறங்கப் போகின்றன.

வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் சீனாவைக் கால் நீட்டி வம்பிழுப்பது, அவரது தனிமனித முரட்டுக்குணம் என்று எளிமையாகக் கடந்துவிடக் கூடாது. அமெரிக்க ஆயுத வல்லரசின் ஆளும் ஆற்றல்களின் புதிய உத்தி அது!

வாயைப் பொத்திக் கொண்டு, தனது ஆதிக்கத் திட்டங்களை வகுப்பதில் வல்லமை காட்டும் சீனா, தனது போட்டி நாடான வட அமெரிக்கா உள்ளிட்ட எதிரிகளை எதிர்கொள்ள அணியமாகி வருகிறது.

22.05.2020 அன்று சீனாவின் தேசிய மக்கள் நாடாளுமன்றம் கூடியது. அதில் வழக்கமாக நிதியாண்டின் பொருளியல் வளர்ச்சிக் குறியீடு (G.D.P. Target) வைக்கப்படும். இக்கூட்டத்தில் வளர்ச்சிக் குறியீடு முன்வைக்கவில்லை. மாறாக, படைத்துறைக்குக் கடந்த ஆண்டைவிட ஒரு விழுக்காடு அளவிற்குக் (6.6% லிருந்து 7.5%) கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இரசியாவிடம் ஏவுகணைகள் வாங்கப் போட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யாவிட்டால் இந்தியாவுக்கு எதிராகப் பொருளியல் தடை விதிப்போம் என்று அண்மையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் தெற்காசியப் பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி வெல்ஸ் கூறினார்.

இச்சூழலில், ஆயுத வல்லரசுகளின் மோதலில் சிக்கிக் கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பல நாடுகள் தங்களை முடிந்தவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கொன்று உருவாகும். வேறு சில நாடுகள் ஆயுத வல்லரசுகள் ஏதாவது ஒன்றுடன் கீழ்ப்படிதல் உள்ள கூட்டாளிகளாகச் சேரும்வாய்ப்பும் உள்ளது.

இவ்வாறான புதிய உலகச் சூழலில், இந்தியாவின் பொருளியல் திவாலாகி விட்ட நிலையில், பா.ச.க. ஆட்சியாளர்கள் பாரத மாதா பக்தியைப் போர்க்காலப் பரப்புரையாகச் செய்வார்கள்.
மாநிலங்களிடம் மிச்சம் மீதி உள்ள சில அதிகாரங்களையும் பறித்துப் புதுதில்லியில் குவித்துக் கொள்வார்கள்.

இந்தியாவை இந்தி மற்றும் சமற்கிருத மயமாக, ஆரியத்துவ மயமாக மாற்றிட கொரோனா காலம் “பொற்காலம்” என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இந்தி பேசாத மாநிலங்களில் குடியேற்றுவது, அவர்களின் முகாமையான திட்டங்களில் ஒன்று.

மராட்டியம், தமிழ்நாடு, குசராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் அதிகமாகக் குவிந்துள்ள புலம் பெயர் தொழிலாளிகளில் மிகப் பெரும்பாலோர் இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பீகார், உ.பி., ம.பி., சத்தீசுகட், ஜார்கண்ட், இராசஸ்தான் போன்ற இந்தி மாநிலங்கள் மற்றும் இந்தியைக் கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ள ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தமிழ்நாட்டில் அதிகமாகக் குவிந்துள்ளனர்.

இவர்கள் கொரோனா முடக்கத்தால் தங்கள் தாயகம் திருப்பினாலும் கோடை விடுமுறைக்குச் சென்று திரும்புவது போன்ற மனநிலையில்தான் சென்றுள்ளார்கள்.

ஏராளமானோர் தமிழ்நாட்டிலேயே தங்கியுள்ளனர். தமிழ்நாட்டுத் தொழில் உரிமையாளர்கள் பலர்,வெளிமாநிலத் தொழிலாளிகளைப் போக வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள். தங்கள் தொழில் நிறுவனங்கள் திறந்தவுடன் வேலைக்கு ஆள் வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.

மீண்டும் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், வேளாண் வேலை வாய்ப்புகள் வழக்கம்போல் செயல்பாட்டிற்கு வரும்போது சொந்த மாநிலங்களுக்குப் போன புலம் பெயர் தொழிலாளிகள் திமுதிமுவென்று தமிழ்நாடு திரும்பும் அபாயம் உள்ளது.

அவ்வாறு வரும் இந்தி மாநிலங்களின் தொழிலாளிகளைத் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்கள் ஆக்குவதற்காக இந்திய அரசு இரு திட்டங்கள் வைத்துள்ளது. ஒன்று, இந்தியா முழுமைக்கும் ஒரே குடும்ப அட்டை தரும் திட்டம். இரண்டு, புலம் பெயர்ந்து வரும் இந்தி மாநிலத் தொழிலாளிகளுக்கு வேலை பார்க்கும் அயல் மாநிலங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்.

இத்திட்டத்தை அண்மையில் நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இத்திட்டங்களால் கோடிக்கணக்கான வட இந்தியர் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்கள் ஆகி விடுவர். அதன்பிறகு, தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. இந்தி மாநிலமாக மாறிவிடும்.

தமிழ்மொழியும் தமிழ்நாட்டில் அலுவல் மொழியாக – கல்வி மொழியாக இருக்காது. இந்தியும் சமற்கிருதமும் கல்விமொழி ஆகிவிடும்!

இது நம் கற்பனையன்று; ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. ஆட்சியாளர்களின் செயல் திட்டம்! இந்தப் பேரழிவு தமிழுக்கும் தமிழர்களின் தாயகத்திற்கும் தமிழ் இனத்திற்கும் நேராமல் தடுக்க வேண்டுமானால், தமிழ்நாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளிகள் அனைவரையும் அவரவர் தாயகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.

புதிதாகப் புலம் பெயர் தொழிலாளிகள் தமிழ்நாட்டிற்குத் தேவைப்படாத வகையில், தமிழ்நாடு அரசு “அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற அமைப்பை உடனடியாகத் தொடங்க வேணடும். இந்த வாரியத்தில் வேலை தேடும் ஆண்களும் பெண்களும் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். வெளி
மாநிலங்களிலிருந்து திரும்பும் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளும் இந்த வாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த வாரியம் தமிழ்நாட்டுத் தொழிற்கூடங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் வேளாண் தொழில்களுக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் உழைப்பாளிகளை வழங்க வேண்டும்.

அந்தந்த வேலைக்கேற்ப வேலை நேரம், ஊதியம் ஆகியவற்றை இந்த வாரியம் வரையறுக்க வேண்டும். எந்தத் தனியார் தொழில் நிறுவனத்திலும் மொத்தத் தொழிலாளிகளில் பத்து விழுக்காட்டிற்கு மேல் வெளிமாநிலத் தொழிலாளிகள் வேலை செய்யக் கூடாது என்றும் தடைவிதிக்க வேண்டும். வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் தரகர் முறையையும் தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு இந்தத் தமிழர் வேலை வழங்கு வாரியத்தை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு உரிமைகளிலும், நலன்களிலும் அக்கறையுள்ள அனைவரும் இந்தக் கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விண்ணப்பங்களாக அனுப்ப வேண்டும். தங்கள் வலைத்தளங்களிலும் இக்கோரிக்கைகளைப் பரப்ப வேண்டும்.

அதேபோல், தமிழின உணர்வாளர்கள், உரிமைக் காப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இன்னும் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளிகளை அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை அணுகிக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் பகுதிகளில் உள்ள தொழில், வணிக, வேளாண் உரிமையாளர்களிடம் வெளி மாநிலத் தொழிலாளிகளை வேலைக்கு வைக்காதீர்கள் – கொரோனா பரவ இடம் கொடுக்காதீர்கள் – மண்ணின் மக்களுக்கே வேலை கொடுங்கள் என்று வேண்டுகோள் வையுங்கள்.

அவர்களுக்குத் தேவையான தொழிலாளிகளையும், மண்ணின் மக்களில் இருந்து ஏற்பாடு செய்து கொடுங்கள்!

தீர்மானம் – 3

தமிழ்நாடு உரிமை பறிபோவதை
தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்க வேண்டும்!

கொரோனா முடக்க காலத்தை மிகவும் சூதான முறையில் பயன்படுத்திக் கொண்டு இந்திய அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது.

அன்றாடப் பணி விதிகளில் திருத்தம் என்ற பெயரால் அரசமைப்புச் சட்டத்திற்கும், ஆற்று நீர்ப் பங்கீட்டுச் சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரான வகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை தனது நீராற்றல் துறைக்குக் கீழ்ப்படிந்த நிறுவனமாக இந்திய அரசு மாற்றி விட்டது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தைப் பறித்துவிட்டது.

அப்பட்டமான இந்த தமிழினப் பகை நடவடிக்கையை எதிர்ப்பதற்கு மாறாக, தமிழ்நாடு அரசு அதனை ஞாயப்படுத்தி அறிக்கை அளித்தது. இச்செயல் இச்செயல் தமிழ்நாட்டு உழவர்களுக்கும்,ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது.

மின்சாரச் சட்டத்தில் புதிய திருத்தம் என்ற பெயரால், “மின்சார சட்டத்திருத்தம் – 2020” என்ற பெயரில் இந்திய அரசு முன்வைத்திருக்கும் வரைவுச் சட்டம், மின்சாரம் தொடர்பான மாநில உரிமைகளை முற்றிலும் பறித்து, தனியார்துறையிடம் ஒப்படைக்கிறது. தனியார் துறையினரே மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் முடிவு செய்வார்கள்.

இத்தனியார் நிறுவனங்கள் தங்களின் முடிவுகளை மாநில அரசுகளிடம் தகவலாக தெரிவித்தால் போதும் என்கிறது
இப்புதிய திருத்தம்.

கட்டணமில்லா மின்சாரம் வழங்க கூடாது என்றும் சலுகை கட்டணத்திலும் மின்சாரம் வழங்க
கூடாது என்றும் இப்புதிய சட்டம் விதி வகுத்துள்ளது. மின் நுகர்வுக் கட்டணத்தைத் தனியார் பகிர்மான நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கிறது.

இச்சட்ட வரைவை முற்றிலும் எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு, உழவர்களுக்கும் குடிசை வீடுகளுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் உரிமையை மட்டும் வலியுறுத்துவது ஏற்கக்கூடியதல்ல! .இச்சட்ட வரைவை முற்றிலும் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து ஆண்டுதோறும் ஏறத்தாழ 3 இலட்சம் கோடி ரூபாய் வருமானமாக அள்ளிச் செல்லும் இந்திய அரசு, தமிழ்நாடு கோரிய கொரோனா இடர் நீக்கத் தொகையை வழங்க மறுத்து வருவது கொடுமையான இனப்பாகுபாடு ஆகும்.

இதுபோதாதென்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகை நிலுவை 12,263 கோடி ரூபாய் இப்போது வரை வழங்காமல் இருப்பது கொடிய வகை நிதித்தாக்குதல் ஆகும்!

இவற்றை எதிர்த்து, அரசியல் வகையில் முழுமையாக அழுத்தம் தருவதற்கு மாறாக, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறப்பதும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரால், தமிழ்நாடு அரசுத் துறைகளில் புதிய பணியாளர்கள் அமர்த்தாமல் தடை செய்வதும் அலுவலகங்களில் பராமரிப்புச் செலவுகளுக்கான தொகையை பெருமளவு வெட்டுவதும் மக்கள் பகை நடவடிக்கைகள் ஆகும்.

தமிழ்நாடு அரசு, இந்திய அரசுக்கு இவ்வாறு பணிந்து போகும் போக்கைக் கைவிட்டு தமிழ்நாட்டு உரிமைகளை நிலைநாட்ட உரிய அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், இதற்குத் தேவையான அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் ஆதரவைத் திரட்டிக் கொள்ள வேண்டுமெனவும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி்க் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 4

டாஸ்மாக் கடைகளை மூடுக!

தமிழ்நாட்டில் கொரோனா முடக்கத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்ததால், மது விரும்பிகள் பலர் குடிப்பழக்கத்தைக் கைவிடும் மனநிலைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறந்து அந்நிலையை அடியோடு மாற்றியுள்ளது.

மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் நிம்மதியுடன் இருந்த பல குடும்பங்கள், இப்போது கொரோனா முடக்கக் காலத்திலேயே குடிநோயாளிகள் செய்யும் கொடுமைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன.

பல இடங்களில் விபத்துகளும், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களும் குடிபோதையில் நடக்கத் தொடங்கியுள்ளன.
மக்கள் வீதிகளில் கூட்டம் கூடக் கூடாது எனத் தடுக்கும் தமிழ்நாடு அரசு, மதுக்கடைகளில் தானே கூட்டத்தைக் கூட்டி கொரோனா தொற்று மையங்களாக மதுக்கடைகளை மாற்றி வருவது மிகப்பெரும் தன் முரண்பாடாக உள்ளது!

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய அரசு போதிய நிதி ஒதுக்காத நிலையில், வேறு வழியில்லை என்பதற்காக டாஸ்மாக் கடைகளைத் திறந்ததாக தமிழ்நாடு அரசு காரணம் சொல்லிக் கொள்வது, அதன் இயலாமையைத்தான் அம்பலப்படுத்துகின்றது.

இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லும் பல இலட்சம் கோடி ரூபாய் வரிப்பணத்திலிருந்து ஒரு பகுதித் தொகையைக் கூட, வலுவாகவும் உறுதியுடனும் இந்திய அரசிடம் கோரிப் பெற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அக்கறை காட்டுவதில்லை. கடிதம் எழுதிக் கொள்வதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். எனவே, இந்திய அரசு நம்மை துச்சமாக மதிக்கிறது!

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பால் விற்பனைக் குழுமங்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டு பால் விநியோகம் முழுவதையும் ஏற்று நடத்தினால், தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய் வருமானம் பெறலாம் என எமது “மகளிர் ஆயம்” அமைப்பு சார்பில் நாங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

அதை ஏற்று, அத்திட்டத்தை செயலாக்கினால் உடனடியாக மதுக்கடைகளை மூட முடியும்! எனவே, தமிழ்நாடு அரசு இதுபோன்ற மாற்றுத் திட்டங்களை சிந்திக்க வேண்டும். இந்திய அரசிடம் உறுதியாகவும் வலுவாகவும் கோரிக்கை வைத்து நிதி பெற வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும் என்றும், மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசைகேட்டுக் கொள்கிறது!

Leave a Response