ஆளுநர் பதவி – ஜி.எஸ்.டி. கூடாது – ததேபே அதிரடி

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது தலைமைப் பொதுக்குழுவின் மூன்றாவது கூட்டம், 2024 சூன் 8 – 9 ஆகிய நாட்களில், ஓசூர் எஸ்.எஸ். மகால் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், துணைத் தலைவர் க.முருகன், துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஓசூர் கோ.மாரிமுத்து, தஞ்சை நா.வைகறை, பழ.இராசேந்திரன், சென்னை வெற்றித்தமிழன், புதுச்சேரி வேல்சாமி, பெண்ணாடம் மா.மணிமாறன், திருச்செந்தூர் மு.தமிழ்மணி, திருச்சி வே.க.இலக்குவன், பூதலூர் பி.தென்னவன், மதுரை கதிர்நிலவன் உள்ளிட்ட தமிழ்நாடு – புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

“தமிழ்நாடு காப்போம்! தன்னாட்சி மீட்போம்!

ஆளுநர் பதவி – ஜி.எஸ்.டி. கூடாது!”– பரப்புரை இயக்கம்

மொழி இன மாநிலங்கள் நடைமுறையில் இந்திய அரசின் காலனிகள் போல் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அனைத்துத் துறைகளிலும் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, இந்திய அரசின் கைகளில் அதிகாரங்கள் மேலும் மேலும் குவிக்கப்பட்டு வருகின்றன.

1950இல் செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம், தில்லியில் அதிகாரக் குவியலோடு உருவானது. ஆனால், 1956இல் மொழி இன மாநிலங்களாக மாநிலங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, அம்மாநிலங்களுக்கு விரிவான தன்னாட்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, இந்திய அரசில் எந்தக் கட்சி ஆண்டாலும் மேலும் மேலும் அதிகாரங்கள் தில்லியில் குவிக்கப்படுகின்றன.

குறிப்பாக, ஆளுநர்கள் சர்வாதிகாரம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியின் மீது எசமானர்கள் போல் நடந்து கொண்டு, சட்டத்தின் ஆட்சியையே சீர்குலைக்கிறார்கள். நரேந்திர மோடி ஆட்சியில், அது உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி, தமிழ்நாடு அரசுக்கு மேல் தனி அதிகார மையமாக செயல்படுவதோடு, ஆரியத்துவத் திணிப்பின் – தமிழின அடையாள மறுப்பின் மையமாக தனது அலுவலகத்தை மாற்றிவிட்டார்.

மோடி அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, மாநிலங்களை குறிப்பாக தமிழ்நாட்டை ஓட்டாண்டியாக்கி வருகிறது. இங்கிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாய், வரி வசூலில் பின்தங்கி இருக்கிற பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. நேரடி வரி வருவாயிலும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படும் பங்கு சுருங்கி வருகிறது. வரி ஏகாதிபத்தியமாக இந்திய அரசு செயல்படுகிறது,

இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலைக் காலத்தில் மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியல் என்ற பெயரால், இந்திய அரசின் ஆதிக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வனம் மற்றும் கல்வி சார்ந்த அதிகாரம், இன்றுவரை மீட்கப்படவில்லை. இந்திய அரசின் அனுமதியோடு காட்டு வளங்கள் சூறையாடப்பட்டு, பெருங்குழுமங்களின் தொழில் வேட்டைக்கு திறந்து விடப்படுவதும், நீட் தேர்வு போன்ற மக்கள் பகைக் கல்வித் திட்டங்கள் திணிக்கப்படுவதும் அரங்கேறியுள்ளன.

எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உண்மையான கூட்டாட்சியாக உருவாக்கி, தமிழ்நாட்டில் தன்னாட்சியை மீ்ட்க வேண்டுமானால், ஆளுநர் என்ற பதவியே ஒழிக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும். நேரடி மற்றும் மறைமுக வரி விதித்துத் திரட்டும் முழு அதிகாரமும் மாநிலத்திற்கு வேண்டும். ஒன்றிய அரசின் தேவைக்கு மாநிலங்கள் வரிப் பங்காக நிதி அளிக்கும் முறை ஏற்பட வேண்டும். பறிக்கப்பட்ட வனம் மற்றும் கல்வி சார்ந்த அதிகாரங்கள் மாநிலத்திற்கே திரும்பி அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாட்டின் தன்னாட்சியை மீட்டு, தமிழ்நாட்டைப் பாதுகாப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் கோரி, “தமிழ்நாட்டைக் காப்போம் – தன்னாட்சி மீட்போம்” என்ற தலைப்பில், விரிவான மக்கள் பரப்புரை இயக்கத்தை வரும் 2024 சூலை மாதத்தில் நடத்துவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது!

தீர்மானம் – 2

தமிழ்நாட்டு தொழில் – வணிகம் – வேலை வாய்ப்பு தமிழர்களுக்கே!

வெளியாரை வெளியேற்ற வேண்டும்! அனைவருக்கும் கல்வித் தகுதிக்கேற்ற வேலை! அவ்வாறு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் வரை வாழ்வூதியம் வழங்க வேண்டும்!

தீர்மானம் – 3

உலகப் பெருந்தொற்று ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது! கொரோனா பெருந்தொற்றை ஒட்டி, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்!

தீர்மானம் – 4

திராவிட மாநிலங்களின் நீர் முற்றுகையை எதிர்த்து,பொருளியல் தடை – மக்கள் திரள் போராட்டம் நடத்துவோம்!

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Response