வி.கே.பாண்டியன் நாம் தமிழர் கட்சியில் இணையவேண்டும் – வலுக்கும் கோரிக்கை

ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக் பதவி இழந்தார்.

இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் மூளையாகச் செயல்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன், தேர்தல் தோல்விக்குப் பிறகு பொதுவெளிக்கு வரவே இல்லை. இந்நிலையில், அவரது மனைவியும் ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் 6 மாத விடுப்பில் சென்றார்.

இத்தகைய சூழலில், விகே பாண்டியன் தான் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறி பேசிய காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விகே பாண்டியன் பேசியிருப்பதாவது….

ஜெய் ஜெகநாத்.. நான் மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வருகிறேன். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வருகிறேன். என் சிறு வயது முதலே எனது கனவு ஐஏஎஸ் அதிகாரியாகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. ஜெகநாத் அருளால் அது சாத்தியமானது. எனது குடும்பம் கேந்திரபடாவில் இருந்ததால் நான் ஒடிசாவுக்கு வந்தேன்.

நான் ஒடிசாவில் கால் பதித்த நாள் முதலே இங்குள்ள மக்களின் ஆழ்ந்த அன்பையும், அரவணைப்பையும் பெற்றேன். ஒடிசாவின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றியுள்ளேன். மக்களுக்காகக் கடுமையாகப் பணி புரிந்துள்ளேன். 12 ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதல்வர் அலுவலகத்தில் பணியில் இணைந்தேன். நவீன் பட்நாயக்குக்காக நான் பணியாற்றியது மிகப்பெரிய கவுரவம். அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட அனுபவம் வாழ்நாள் முழுமைக்குமானது. அவருடைய எளிமை, தலைமைப் பண்பு, தார்மிகக் கொள்கைகள், எல்லாவற்றுக்கும் மேலாக ஒடிசா மக்களுக்கான அவரது அன்பு என்னை ஈர்த்தது.

என் மீதான அவர் எதிர்பார்ப்பு எல்லாம் அவருடைய ஒடிசாவுக்கான கனவுகளை நான் செயல்படுத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. கொரோனா காலத்தில் நாங்கள் மாநிலத்தின் 30 மாவட்டங்களுக்கும் பயணம் செய்து சுகாதார கட்டமைப்புகள் பெருந்தொற்று நெருக்கடிகளைச் சமாளிக்க ஏதுவாக இருப்பதை உறுதி செய்தோம். அதே நேரத்தில் ஃபனி, பைலின் என்ற இரண்டு புயல்களைச் சந்தித்தோம்.

நான் ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளக் கட்சியில் இணைந்தேன். அதன் பின்னணியில் ஒரே ஒரு இலக்கு தான் இருந்தது. தனது குடும்பத்துக்கோ அல்லது தன் வழிகாட்டிக்கோ ஒருவர் எத்தகைய உறுதுணையாக இருக்க விரும்பக்கூடுமோ. அதையே நான் செய்தேன். சில பார்வைகளையும், சில விமர்சனங்களையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சில அரசியல் கற்பிதங்களை சரியான நேரத்தில் எதிர்கொண்டு விளக்க முடியாமல் போனது எனது பலவீனமாகக் கூட இருக்கலாம்.

நான் அரசியலுக்கு வந்தது தேர்தலில் எனது வழிகாட்டி நவீன் பட்நாயக்குக்கு உதவ வேண்டும் என்பதற்காக மட்டுமே. எனக்கு எந்த ஒரு அரசியல் பதவி மீதும் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. கடந்த 12 ஆண்டுகளாகவே ஒடிசாவையும், நவீன் பட்நாயக்கையுமே நான் முன்னிலைப்படுத்தி எனது கடமைகளைச் செய்து வந்தேன். இன்றுவரை என்னிடம் உள்ள சொத்துகள் எல்லாம் என் தாத்தா வழியில் எனக்குக் கிடைக்கப்பெற்றவை மட்டுமே. நான் ஐஏஎஸ் பணியில் இணைந்த போது இருந்த சொத்துகள் தான் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றளவும் இருக்கின்றன. எனது மிகப் பெரிய சொத்து ஒடிசா மக்களின் அன்பைப் பெற்றதே. அரசியலில் நான் சேர்ந்ததன் காரணம் நவீன் பட்நாயக்குக்கு உதவுவதற்காக மட்டுமே.

இத்தருணத்தில் நான் தீவிர அரசியலில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளேன். எனது அரசியல் பயணத்தில் யாரையாவது புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். எனக்கு எதிராக புனையப்பட்ட பிரச்சார கட்டுக்கதைகள் பிஜு ஜனதா தள தோல்விக்குக் காரணமாக இருந்திருந்தால் நான் ஒட்டுமொத்த பிஜு ஜனதா தள கட்சியினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இலட்சக் கணக்கான பிஜு ஜனதா தள கட்சியினருக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எப்போதுமே ஒடிசாவை என் இதயத்திலும், எனது குரு நவீன் பட்நாயக் என் மூச்சிலும் கலந்திருப்பார். அவர் நலனுக்காக எப்போதுமே ஜெகநாதரை வேண்டியிருப்பேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்தக் காணொலி வெளியானது முதல் தமிழர் என்கிற ஒரே காரணத்தால் மோடி,அமித்சா உள்ளிட்டோரின் நேரடித் தாக்குதல்களால் வீழ்த்தப்பட்ட பாண்டியன்,தமிழ்நாட்டுக்கு வந்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response