ஓபிஎஸ் அழைப்பு எடப்பாடி பழனிச்சாமி நிராகரிப்பு

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்குச் சாதகமாக வந்ததைத் தொடர்ந்து ஓ.பன்னிர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்…..

ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள்.தொண்டர்கள் விருப்பத்தைப் பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். யார் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்பதை யாரும் குறிப்பிடவில்லை. அதிமுகவை சிலர் தன்வசம் கொண்டுபோக நினைக்கிறார்கள். சிலர் கட்சியை தன்வசப்படுத்தும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட்டனர். 2017 இல் அணிகள் இணைந்த போது கட்சி விதிகளைத் திருத்த ஓ.பன்னீர்செல்வம் நிர்பந்தம் செய்தார். ஓபிஎஸ் நிர்பந்தம் காரணமாக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

அதிமுக விதிகளை மாற்றவோ, பதவிகளுக்கு ஒப்புதல் தரவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்குப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டன. 2,663 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள்; தொண்டர்கள் தான் அவர்களைத் தேர்வு செய்தனர். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை மாவட்டச் செயலாளர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர். ஒற்றைத் தலைமை தொடர்பாக ஜூன் 14 இல் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை.

பொதுக்குழுவுக்கு அழைப்பு வைக்கப்பட்ட நிலையில் அனுமதி தரக்கூடாது என காவல்துறைக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பவர்தான் ஓபிஎஸ். நானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என ஓபிஎஸ் நினைக்கிறார். ஒன்றிணைந்து செயல்பட ஓபிஎஸ் விடுத்த அழைப்பை ஏற்கமுடியாது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் முன்னிலையிலேயே வன்முறை அரங்கேற்றப்பட்டது. ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர் ஓபிஎஸ். அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஆவணங்கள் அள்ளிச் சென்றவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?.

கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடும் போது அவருடன் எப்படி இனைந்து செயல்பட முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தால் தான் அதிமுக தோற்றது.

முதலமைச்சர் வேட்பாளராக என்னை ஓபிஎஸ் ஏற்க மறுத்ததே தோல்விக்கே காரணம். கட்சியில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டால் மக்களிடம் அதிமுக மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? 1989 இல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு எதிராணியாக இருந்த ஜானகி அணிக்கு வேலை பார்த்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா அணிக்கு எதிராகப் போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஏஜென்ட்டாக இருந்தார்.
எங்களுக்கு எதிராக வந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கிறோம். மேல் முறையீட்டில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Leave a Response