ஆர்.எஸ்.பாரதி திடீர் கைது – பின்னணி இதுதான்

தி.மு.க அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இன்று அதிகாலை தேனாம்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். பிப்ரவரி 15 ஆம் தேதி அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துக்கூறும்போது தவறாகப் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனையொட்டி இன்று காலை அவரைக் கைது செய்துள்ளனர்.

அப்போது ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிப்ரவரி 15 ஆம் தேதி அன்பகத்தில் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துக் கூறும்போது தவறாகப் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே அதற்கு மறுப்பும் வருத்தமும் தெரிவித்துவிட்டேன்.

இது நடைபெற்று இது நடந்து ஏறத்தாழ 100 நாட்கள் ஆகிவிட்டன. அதாவது கொரோனா தொற்று வருவதற்கு முன்பாகப் பேசினேன். ஆனால் கொரோனா இன்றைக்கு சென்னையில் உச்சகட்டத்தில் உள்ளது. 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் என்னைக் கைது செய்து சிறையில் வைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனக்கு 71 வயதாகிறது. நானொரு டயாப்படிஸ் பேஷண்ட், ஹைபர்தென்ஷன் பேஷண்ட் இதை நான் எழுத்துப் பூர்வமாக வந்திருந்த காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்து உள்ளேன். நீதிமன்றத்திலும் சொல்ல உள்ளேன். சிறைச்சாலைக்கு நான் பயந்தவன் அல்ல. நான் மிசா காலத்தில் ஜெயிலில் இருந்தவன். கலைஞருடன் பலமுறை ஜெயிலில் இருந்தவன் என்பதால் இது புதிதல்ல.

ஆனால், இன்று தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற போது நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மீது நான் ஒரு புகார் மனுவை விஜிலன்ஸ் துறையிடம் கொடுத்தேன். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு என்னைக் கைது செய்கிறார்கள்.

உங்கள் மூலமாக எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்வது இந்தக் குறைந்த நேரத்தில் கோயம்புத்தூர் நகராட்சியில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. 27 ரூபாய்க்கு வாங்கவேண்டிய வேப்ப எண்ணெய்யை பல மடங்கு அதிகம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஊழல் புகார்களைக் கொடுக்கின்ற காரணத்தினால் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போடச் சொல்லி இருக்கிறார்கள்.

இப்போது அதுமட்டுமல்ல இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அந்த வழக்கு அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதின் பேரில் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டத்தில் இப்போது என்னைக் கைது செய்திருக்கிறார்கள்.

இன்னொரு மனு இந்த எப்.ஐ.ஆரை ஸ்குவாஷ் செய்யப் போடப்பட்டுள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது. இப்படி இரண்டு நிலையில் இருக்கும் போது அவசர அவசரமாக கொரோனாவைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்களைப் போன்றோரைக் கைது செய்யத் துடிக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை, என் தலைவர் கலைஞர் 77 வது வயதில் கைது செய்யப்பட்ட நிலையில், நான் 71 வயதில் கைது செய்யப்படுகிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response