கைது நடவடிக்கையிலிருந்து டி.ஆர்.பாலு தயாநிதிமாறன் தப்பினர்

அண்மையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்த போது அவர் அவமரியாதை செய்தார் என்று குற்றம் சாட்டினர். அதுசம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்றும் கூறினர்.

இதனால், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி இருந்தது. அவர்கள் இருவரும், தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை இரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கில் முன்பிணை கோரியும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. நீதிபதி நிர்மல்குமார் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை முடிவில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீது மே 29 ஆம் தேதி வரை காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளார். வழக்கை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் மே 29 ஆம் தேதி வரை அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவியலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Response