ஜூன் மாதமும் ஊரடங்கு நீடிக்கும் – தமிழக அரசின் கடிதத்தால் அம்பலம்

இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதையடுத்து மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் பயணிகள் தொடர்வண்டிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால்,புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு சிறப்பு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மே 1 ஆம் தேதியிலிருந்து 2,317 சிறப்புத் தொடர்வண்டிகள் மூலம் 31 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மே 12 ஆம் தேதி டெல்லியில் இருந்து 15 சிறப்பு ராஜ்தானி ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 4 ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 தொடர்வண்டிகளை முக்கிய நகரங்களுக்கிடையே இயக்க தொடர்வண்டித்துறை முடிவெடுத்து,பயணச்சீட்டு முன்பதிவையும் தொடங்கியது. இந்த 200 வண்டிகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் நிலையில் இணையதள முன்பதிவு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அனைத்துப் பயணிகளும் இணையப் பயணச்சீட்டு மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தொடர்வண்டித்துறை அறிவித்துள்ளது.

இதுவரை 5 லட்சத்து 72 ஆயிரத்து 219 பயணச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஏறக்குறைய 12 இலட்சத்து 54 ஆயிரத்து 706 பயணிகள் மே 21 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் அதிகமான மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்பயணத்தில், பொதுப் பெட்டியில் அனைத்துப் பயணிகளுக்கும் உட்கார இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். முன்பதிவு செய்யாத பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சாதாரண கட்டணம் மட்டுமே இருக்கும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.

பயணத்தின் போது எந்தவொரு பயணிகளுக்கும் பயணச்சீட்டு வழங்கப்படாது. இந்த வண்டிகளில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவு அனுமதிக்கப்படாது. திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு முன்பு இணையதள நடப்பு முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும்.

அனைத்துப் பயணிகளும் கட்டாயமாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சிறப்பு சேவைகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பயணிகள் குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்பே நிலையத்திற்கு வர வேண்டும். பயணிகள் நிலையத்திலும் வண்டிகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறி காரணமாக குறிப்பிட்ட பயணி பயணிப்பதற்கான வாய்ப்பை இழக்கும்பட்சத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி பணம் திருப்பித் தரப்படும்.

ஒருவேளை பெட்டியில் ஒரு பயணிக்கு நோய்த்தொற்று இருப்பதாக அறியப்பட்டால், மற்ற பயணிகள் அனைவரும் அவருடன் பயணிக்க விரும்பவில்லை எனில், அனைத்துப் பயணிகளுக்கும் முழுப் பணம் திரும்பத் தரப்படும் என்ற விபரத்தையும் தொடர்வண்டி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் பட்டியலில் தமிழகத்துக்கான தொடர்வண்டிகள் எதுவும் இல்லை. கொரோனா பாதிப்பால் தமிழகத்துக்கு வண்டிகள் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இதனால், தமிழகத்துக்கு சிறப்பு வண்டிகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளதால் தானிகள்,முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவையை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதைதொடர்ந்து சென்னையைத் தவிர(சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம்) திருச்சி, விழுப்புரம், காட்பாடி, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள வழித்தடங்கள் வழியாக குளிர்சாதன வசதி இல்லாத தொடர்வண்டிகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கோவை- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12084,12083) ஜனசதாப்தி ரயில்களும், சென்னை எழும்பூர்- மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635, 12636) மதுரை- விழுப்புரம் இடையேயும், அதைப்போன்று திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் (22627,22628) திருச்சி-நாகர்கோவில் இடையேயும், கோவை- சென்னை இடையே இயக்கப்படும் ரயில் (12679, 12680) கோவை-காட்பாடி இடையே இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு தெற்கு ரயில்வே சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

இதையடுத்து மற்ற மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது போல் ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழகத்திலும் விரைவில் குளிர்சாதன வசதி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சென்னையைத் தவிர மாவட்டங்களுக்குள் மட்டுமே பொதுப் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இந்தத் தொடர்வண்டிகள் இயக்க தமிழக அரசு அனுமதி கேட்டதன் மூலம் சென்னையைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்குள் செல்ல ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஊரடங்கு தற்போதுள்ள தளர்வுகளுடன் நீடிக்கும் என்பதும் தெரிகிறது.

Leave a Response