இரத்தம் சிந்திப் பெற்ற உரிமையை இரத்து செய்ய விடமாட்டோம் – ஏர்முனை ஆவேசம்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும்
ஏர்முனை இளைஞர் அணி செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…….

இரத்தம் சிந்திப் பெற்ற உரிமையை இரத்து செய்ய விடமாட்டோம்.

உழவர் பெருந்தலைவர் ஐயா சி.நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் இலட்சக்கணக்கான உழவர்கள் 1970 ஆண்டு தொடங்கி 1984 வரை பலகட்ட போராட்டங்கள் நடத்தி பெற்று கொடுத்து உரிமை தான் உழவர்களுக்கான கட்டணமில்லா மின்சாரம்.

64 உழவர்கள் உயிர்த்தியாகம் செய்து ஆயிரக்கணக்கான உழவர்கள் தமிழகமெங்கும் பல்வேறு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி பல கொடுமைகளை அனுபவித்து இரத்தம் சிந்தி பெற்ற உரிமையில் தான் ஏறக்குறைய 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டு அதன் காரணமாக உழவர்கள் பயன்பெற்று வருகிறோம்.

ஆனால் சமீபத்தில் மத்திய அரசு மின்சாரச் சட்டம் திருத்தம் கொண்டு வந்து விவசாயிகளான இலவச மின்சாரம் இரத்து செய்யபடவேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து அதை மாநிலங்களுக்கு தெரியப்படுத்தி அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லை.பல மாவட்டங்கள் மழைமறைவு பிரதேசங்களாக உள்ளது.அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகும் நதிநீர் பல ஆண்டுகளாக முறைப்படி நமக்கு கிடைக்கவில்லை.இருந்த போதும் கிணற்று பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமாகவே இன்று பெரும்பாலும் விவசாயம் நடைபெறுகிறது.

ஆழ்துளை கிணறுகள் 1000 அடி முதல் 1800 அடி வரை போடப்பட்டு தண்ணீர் எடுத்து தான் பல மாவட்டங்களில் விவசாயம் செய்யப்படுகிறது.
மின் கட்டணம் செலுத்தி இது போன்ற சூழ்நிலையில் விவசாயம் செய்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றது.

தமிழகத்தில் மிக நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விவசாய விளைபொருட்கள் கிடைப்பது கட்டணமில்லா மின்சாரத்தில் விவசாயம் செய்வதால் தான் என்பதை உணர்ந்து பொதுமக்களும் இதை எதிர்த்துப்போராட உறுதியேற்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த எதேச்சாதிகார உத்தரவு விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிப்பதாக உள்ளது.

தமிழக முதல்வர் தொடங்கி அனைத்து தமிழக்க் கட்சிகளும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை இரத்து செய்யக்கூடாது என கூறி வலியுறுத்துவதை வரவேற்கிறோம்.

அதே வேளையில் சுதந்திர இந்தியாவில் எங்கும் நடைபெறாத வீறுகொண்ட உழவர் உரிமைப் போராட்டத்தை நடத்திய வரலாறு கொண்ட தமிழக உழவர்கள் உயிர்த் தியாகம் செய்து இரத்தம் சிந்திப்பெற்ற உரிமையைக் காக்க மீண்டும் களம் காண தயாராகவே இருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response