திமுகவில் 1989-91 ஆண்டுகளிலும், 2006-11 ஆண்டுகளிலும் சட்டமன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப் பொறுப்பான துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.
ராசிபுரத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி அதே ஊரைச் சேர்ந்த முருகன் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதை வரவேற்று வாழ்த்துத் தெரிவிக்க தனது மகனுடன் கமலாலயம் சென்றார். வி.பி.துரைசாமி சமீபகாலமாக கட்சி மீதான அதிருப்தியில் மன வருத்ததில் இருந்து வந்தார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விருப்பப்பட்ட இடத்தில் போட்டியிட இடம் ஒதுக்காத நிலையில், கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒதுக்காமல் அந்தியூர் செல்வராஜுக்கு அது அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாளேடு ஒன்றுக்குப் பேட்டி அளித்த விபி.துரைசாமி கட்சித் தலைமை குறித்தும், பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது குறித்தும் நியாயப்படுத்திப் பேசியிருந்தார்.
இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வி.பி.துரைசாமியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரான முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் கட்சிப் பொறுப்பிலிருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டதும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் விடிய விடிய அவருடன் பேசியிருக்கிறார்களாம். தில்லி, ஹைதராபாத், சென்னை என்று பல்வேறு இடங்களிலிருந்து பேசியவர்கள் பாஜகவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில் அவர் பாஜகவில் சேரவிருக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்கிறார்கள்.அங்கு அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.