இப்படிச் செய்தால் தமிழீழ விடுதலை சாத்தியம் – கண.குறிஞ்சி கட்டுரை

மே 17 & 18 / 2020 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுநாளையொட்டி மனித உரிமைச் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி எழுதியுள்ள கட்டுரை…..

தமிழீழ விடுதலைக்குத் தேவை கூட்டுமுயற்சி.

மாவீரர் நாள் என்பது ஒருசடங்கு அல்ல!ஒப்பாரி வைக்கும் நாளும் அல்ல!
விடுதலைப் போரில் விதையாக விழுந்தவர்களை நினைவுகூரும் அரியநாள் அது. அவர்களது தியாகத்தை எண்ணி எழுச்சி பெறும் பெருநிகழ்வு அது.

11 ஆண்டுகள் என்பது தனிமனித வாழ்வில் நீண்ட கால இடைவெளி. ஆனால், வரலாற்றில் அது ஒரு சிறு துளி. அது தரும் படிப்பினை என்னவென்றால், நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆனால், நீதி ஒருக்காலும் தோற்பதில்லை என்பதுதான்.

பாசிச முசோலினி தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது எனக் கொக்கரித்தான். ஆனால் கொடுங்கோலனான அவனை மக்கள் முச்சந்தியில் வைத்துத் தூக்கிலிட்டார்கள். செருப்பால் அடித்து, அவனது சவத்தைச் சாக்கடையில் தூக்கி வீசினார்கள்.

முசோலினிக்கு ஏற்பட்ட கதி தனக்கு நேர்ந்து விடக்கூடாது என நடுநடுங்கிய இட்லர், ஒரு கோழையைப் போல் பூமிக்கடியில் ஒளிந்து கொண்டு, தற்கொலை செய்து செத்து மடிந்தான்.

அவனது நாஜிப் படைத்தளபதிகள் நிகழ்த்திய இனப் படுகொலைக்காக நூரம்பர்க்கில் வைத்து, அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. பல்லாண்டுகள் கழிந்தாலும், நீதியின் நெடுங்கரங்கள் ஓய்ந்து விடவில்லை.

ஈழப்படுகொலைக்கும் அது போல் வரலாற்றில் நீதி கிடைப்பது உறுதி. ஆனால் நீதி, தானாகக் கிடைத்து விடாது.
தொடர் முயற்சியும், தொய்வுறாத் திட்டமிடலும் அதற்குத் தேவை.

ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு உரிய நீதியை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு மூன்று பிரிவு மக்களுக்கு இருக்கிறது.

யார் அந்த மூவர்?

தமிழீழத் தமிழர்,
தமிழ்நாட்டுத் தமிழர்,
புலம்பெயர் தமிழர்.

இவர்கள் மூவரும்தான் ஆயுத எழுத்தைப் போல ( ஃ ) திரிசூலத்தைப் போல ஒன்றிணைந்து நீதியைப் பறித்தெடுக்க வேண்டியவர்கள்.

இன்றைய உலகமயச்சூழலில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன.

தாயகத் தமிழீழத் தமிழர்கள், இராசபக்சே மற்றும் கோத்தபய ஆகிய இரண்டு சர்வாதிகாரிகளின் கீழ் இலங்கையில் இன்று பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அவர்களது போராட்டங்கள், அளவிலும் தன்மையிலும் ( Quantity & Quality ) சற்று மாறுபட்டே இருக்கும். கடுமையான அடக்குமுறைக்கு இடையிலும், பாறையைப் பிளக்கும் வேரினைப் போல, நிலத்தைக் கிழிக்கும் நீரோட்டம் போல, தொய்ந்துவிடாமல் போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

இராணுவமயமாதலை எதிர்த்தும், சிங்களமயமாதலை எதிர்த்தும் தமிழீழத்தில் இன்று போராட்டங்கள் தொடர்கின்றன. காணி அதிகாரம், காவல் அதிகாரம் கோரியும், காணாமல் அடிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் வேண்டியும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. “எழுக தமிழ்!” பேரணி, மக்கள்திரள் பேரணியாக உருவெடுக்கிறது. கடும் இராணுவ அடக்கு முறைகள் தொடர்ந்தாலும், மக்களிடையிலும், யாழ் பல்கலைக் கழகத்திலும் மாவீரர் நாள் எழுச்சியுடன் கொண்டாடப்படுவது நம்பிக்கை ஊட்டுகிறது. இப்போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

இனவெறி அரசால் தொடர் பாதிப்புக்குள்ளாகி வரும் தமிழீழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ்பேசும் முசுலீம்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து போராட்டங்களைத் தீவிரமாக்க வேண்டும். இந்த அளவுதான் இலங்கையில் இப்பொழுது இயலும்.

அடுத்து, தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குக் கடினமான பொறுப்பு இருக்கிறது. உலகில் தமிழீழம் அமையவே கூடாது என எண்ணும் முதல்நாடு, இந்தியாதான். பிறகுதான் இலங்கை.
எனவேதான் சிங்களக் காடையர்களுக்கு முழு ஆதரவையும் இந்தியா வழங்கி வருகிறது.

இந்திய – சீனப் போர் நடைபெற்ற பொழுதும், வங்கதேசப் போர் நடைபெற்ற பொழுதும் இந்தியாவுக்கு எதிராக,
சீனாவைத்தான் இலங்கை ஆதரித்தது. தந்தை செல்வாவிலிருந்து, தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வரை, எப்பொழுதும் தாங்கள் இந்தியாவுக்குத்தான் ஆதரவாக இருப்போம் எனச் சொல்லாலும், செயலாலும் மெய்ப்பித்தாலும், பார்ப்பனிய இந்திய வல்லரசு அதை நம்ப மறுத்தே வந்திருக்கிறது. இரண்டகம் செய்தாலும், இலங்கையைத்தான் அது ஆதரிக்கிறது.

அதனால்தான், சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் வராமல் பாதுகாக்கும் காவலனாக இந்தியா விளங்குகிறது.

தெற்காசியாவில் இந்தியத் துணைக்கண்டம் மிகப்பெரிய சந்தையைக் கொண்டிருக்கிறது. எனவே பொருளாதார ஆதாயத்தை மனதிற் கொண்டு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள், இந்தியாவுக்குச் சார்பாகவே முடிவு எடுக்கின்றன. சீனா, கியூபா, வெனிசூலா போன்ற “பொதுவுடைமை” (?) நாடுகள்கூட இத்தகைய நிலைபாட்டினையே எடுத்தன. ஈழப்போரின் பொழுது இது வெட்டவெளிச்சமாகத் தெரிந்து விட்டது.

எந்தக் காலத்திலும் இந்தியா, இலங்கைக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கப் போவதில்லை. எனவே தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாகவே இந்தியா நிலைபாடு எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்குரிய தீவிரமான அரசியல் அழுத்தத்தைத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழகத் தமிழர்களுக்கு உள்ளது. தமிழகத்திற்கு இறையாண்மை இல்லாத இன்றைய சூழலில், தீவிரமான மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் இடைக்காலத்தில் இப்பொழுது இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியும்.

மூன்றாவதாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் சர்வதேச அளவில் இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக —

(1) தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை

(2) தமிழீழத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய பொது வாக்கெடுப்பு

— ஆகிய முக்கியக் கோரிக்கைகளை வென்றெடுக்கத் தேவையான அனைத்து வகையான முயற்சிகளையும் அவர்கள் முன்னெடுப்பது சிறப்பாக இருக்கும்.

குறிப்பாகச் சட்ட வழியிலான நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சர்வதேச அளவில் புகழ் பெற்ற சட்ட வல்லுநர்களைக் கலந்தாய்ந்து, நமது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

இன்றைய புவிசார் அரசியலில், இத்தகைய கோரிக்கைகளுக்கு அரசுகள் உடனடியாக ஆதரவு தரக்கூடிய வாய்ப்புக் குறைவு. எனவே, பல்வேறு நாடுகளிலுள்ள சனநாயக சக்திகள், மனித உரிமையாளர்கள், நேசஅணிகள் போன்றோரது ஆதரவை முதற்கண் திரட்ட வேண்டும். பிறகு அடுத்தடுத்த படிகளில் ஏற வேண்டும்..

இத்தகைய முயற்சி, எதிர் நீச்சல் இடுவது போன்றதுதான். இத்தகைய கடினமான சவால்களை எதிர்கொள்ளக் கூட்டு முயற்சி தேவை. சனநாயக வழியிலான நெகிழ்வான கூட்டுத்தலைமைதான் இதை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அதற்கு முதல் நிபந்தனை, ஒற்றுமை. நம்மைப் பிரிக்கக் கூடிய சிறு சிறு புள்ளிகளைப் புறந்தள்ளி விட்டு, நம்மை இணைக்கக் கூடிய பெரும் கோடுகளை நோக்கி நாம் விரைந்து செல்ல வேண்டும்.

எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இவ்வுலகில் மாறாத உண்மை என்பதைக் கருத்தில் கொண்டு களமாட வேண்டும்.

நம்பிக்கை, மலையையும் நகர்த்தும்.

ஈழம் சிந்திய கண்ணீரையும், செங்குருதியையும் நாம் மறக்காமல் இருந்தால், நம் பயணம் வெற்றிப் பயணமாகவே அமையும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response