தமிழக அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை

தமிழகத்தில் பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கவையாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் எவ்வளவு பேர்? அது இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்த தகவல்களை கல்வித்துறை பட்டியலாக தயாரித்து இருக்கிறது.

அதன் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு என்று அந்தந்தப் பகுதிகளில் தனி சிறப்புத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் பொதுவான தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விவேக், பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.

என்று கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Leave a Response