விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தேனீக்கள் – கொரோனா காலத்தில் செய்யும் உதவிகள்

தமிழீழத்திலும் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முன்னெடுப்பில் மக்களுக்கு உதவிகள் செய்துவருகிறார்கள். அதுகுறித்து அவர் விடுத்திருக்கும் செய்திக்குறிப்பு…..

உலர் உணவு விநியோகத்தில் அன்றும் இன்றும்

கொரோனா தொற்றுக் காரணமாக நாடே முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் யூனிவேர்சல் கல்வி நிறுவனத்தின் தேனீக்களைத் தேடித் தொடர்பு கொள்ளவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டுள்ளது.

யூனிவேர்சல் கல்வி நிறுவனத்தில் 90களின் தொடக்கத்தில் போர்க்கால அவசர உதவிகளுக்கென தேனீக்கள் என்ற பெயரில் மாணவர்களைக் கொண்ட சமூக சேவைப் பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. அப்போது, இந்தப் பெயரை தற்போது இலண்டனில் வசிக்கும் பா. சபேசன் என்ற மாணவரே தெரிவு செய்து தந்திருந்தார். மருத்துவமனையில் காயம்பட்ட போராளிகள், பொதுமக்களைப் பராமரித்தல், அவர்களுக்கான இளநீர், உலர் உணவுகளைச் சேகரித்து வழங்குதல், மிகவும் தட்டுபாடாக இருந்த மண்ணெண்ணெய், சவர்க்காரம், சீனி, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களைக் கொழும்பில் இருந்து கொள்வனவு செய்வித்து எவ்வித இலாபமும் இல்லாமல் கொள்வனவு விலைக்கே பொதுமக்களுக்கு விநியோகித்தல் போன்ற சேவையையும் தேனீக்கள் முன்னெடுத்திருத்தார்கள்.

அப்போது திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து வந்தவர்களைத் திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் தங்கவைத்த விடுதலைப் புலிகள் அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தேனீக்களிடமே விட்டிருந்தனர். மிதிவண்டியில் பளைவரைக்கும் சென்றுகூட நாங்கள் தேங்காய்களை வாங்கி வந்தது இன்றும் பசுமையாக நினைவிருக்கின்றது.

தற்போது கொரோனாத் தொற்று அச்சம் காரணமாகவும் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் அன்றாடம் தொழில் செய்து பிழைக்கும் கூலித் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்றி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு நேர உணவைப் பெறுவதே பல குடும்பங்களுக்குப் பெரும் பாடாக இருக்கின்றது.

வெளிநாடுகளில் வாழுகின்ற தேனீக்கள் சிலருடனும், பழைய மாணவர்கள் சிலருடனும் எனது முகநூல் நண்பர்கள் சிலருடனும். தொடர்பு கொண்டு குறைந்த பட்சம் 2000 பேருக்காவது உலர் உணவு வழங்க வேண்டி உள்ளது, உதவி செய்ய முடியுமா எனக் கேட்டேன். உடனடியாகவே பலர் மனமுவந்து உதவ ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இதுவரையில் அனுப்பிவைத்த பணத்தைக் கொண்டு இங்குள்ள எனது பழைய மாணவர்களால் உலர் உணவு விநியோகத் திட்டம் நேற்று (28.03.2020) ஆரம்பமாகியுள்ளது. அன்றய தினமே அடையாளம் காணப்பட்ட 500 குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு, சமபோசா (சத்து மா), உலர்த்திய பால்மா அடங்கிய உலர் உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் அரசாங்க அதிபர், பொலிஸ், இராணுவம் ஆகிய முத் தரப்பிடமும் இருந்து இதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். உலர் உணவுப் பொருட்களை தியாகி அறக்கொடை நிதியத்தின் (வுஊவு) விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்து அங்கேயே பொதி செய்யும் பணியை இக்குழு மேற்கொண்டு வருகின்றது. பொருட்கள் தட்டுப்பாடான நேரத்திலும் நியாய விலையில் தரமான பொருட்களைத் தந்துதவும் அவர்களுக்கு எனது நன்றிகள்.

எனது கோரிக்கையை ஏற்று உடனடியாகவே பணத்தை அனுப்பத் தொடங்கியிருக்கும் எனது மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும், இங்கே இரவு பகலாக இப் பணியை மேற்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இப்பணியை முன்னெடுப்பதற்கு இதுவரை பங்களிப்புச் செய்யாத எனது மாணவர்களிடமும் நண்பர்களிடமும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன். இயற்கை என்ற பேரிறைவனின் ஆசீர்வாதம் உங்கள் எல்லோருக்கும் கிட்டுவதாக.

அன்புடன்
பொ.ஐங்கரநேசன்

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response