அருள்கூர்ந்து நிறைவேற்றுங்கள் – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை அவரவர் மாநிலத்திற்கு உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

கொரோனா நச்சுயிரிக் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கப் போடப்பட்டுள்ள நடமாட்டத் தடை ஆணைகள் பெருமளவுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பல மாநிலங்களில் பாதித்திருக்கிறது. கேரளாவில் வேலைக்குச் சென்ற தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தமிழ்நாடு காவல்துறையாலும் கேரளக் காவல் துறையாலும் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து தில்லி, அரியானா மாநிலங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பல்லாயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தில்லியில் ஊர்திகள் இன்றி நடந்து செல்வதும், அவர்கள் தடுக்கப்படுவதும் பெரும் துயரக் காட்சிகளாய் உள்ளன.

தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமாகப் பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவு காலத்திற்கு இவர்களை இவ்வாறு தடுத்து வைக்க முடியும்?

புதுதில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் விரைவுச் சாலை தொடங்குமிடத்தில் காவல்துறையினரால் தடுக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளிகளின் அவலக்குரல்கள் ஊடகங்களிலும், ஏடுகளிலும் வந்துள்ளன. “ஒருவர் நான் இங்கு பட்டினியால் சாவதைவிட என் தாய் மண்ணில் நோயினால் சாவதையே விரும்புகிறேன்” என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டில் சிக்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களைத் தடுக்கும் காவல்துறையினரிடம் கையெடுத்துக் கும்பிட்டுத் தங்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.

வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்திய மக்களை சிறப்பு வானூர்திகளில் இந்திய அரசு அழைத்து வந்தது. அவ்வாறு அழைத்து வருவதற்கு இன்னும் கோரிக்கைகள் உள்ளன.

அதே அணுகுமுறையைப் பின்பற்றி, வெளி மாநிலங்ககளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை – மக்களை – தொற்று நச்சுயிரி அண்டாத வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்புத் தொடர்வண்டிகள், பேருந்துகள் மூலம் உடனடியாக அவரவர் தாயகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை இந்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களை வரையறுத்து அந்நாட்களில் மட்டும வெளி மாநில மக்களை அவரவர் தாயகத்திற்கு அனுப்பும் பணியை முடிக்கலாம்.

கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தன் முயற்சியில் மீட்டுக் கொண்டு வரும் பணியைத் தொடங்க வேண்டும்.

அருள் கூர்ந்து, தமிழ்நாடு அரசு இவ்வேண்டுகோளைக் கவனத்தில் எடுத்து நிறைவேற்றுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response