டெல்லியில் பாஜகவுக்கு தோல்வி – கருத்துக்கணிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 2 ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பரப்புரை செய்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பரப்புரை செய்தார்.

அதேசமயம், 1998 ஆம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டது.

அதேபோல காங்கிரசுக் கட்சியும், 2014 ஆம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த முறை காங்கிரசு, பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தது.

டெல்லி தேர்தலில் மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், டெல்லி தேர்தலுக்கான வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் 11 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இந்தச் சூழலில் டெல்லி தேர்தலில் வாக்களித்த வாக்களர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

அவற்றில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டாவது முறை மத்திய ஆட்சியைப் பிடித்தாலும் இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் பாஜகவுக்கு இடமில்லை என்று தெரிகிறது.

Leave a Response