பேரறிவாளனை விடுதலை செய் – இந்தியாவை அதிர வைக்கும் டிவிட்டர் பரப்புரை

இராஜீவ் காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் இருக்கிறார்கள்.அவர்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி 161 ஆவது சட்டப்பிரிவின்படி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது.

ஆனாலும் அதற்கு ஒப்புதல் தராது காலந்தாழ்த்தி வருகிறார் தமிழக ஆளுநர். அவருடைய இச்செயலை அதிமுக பாஜக தவிர ஏனைய கட்சிகள் எல்லாம் கண்டித்துவிட்டன. ஆனாலும் ஆளுநர் அசையவில்லை. தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும் ஏழு தமிழரை விடுதலை செய்யுங்கள் என்கிற குரல்கள் வேகமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று (பிப்ரவரி 4,2020) #ReleasePerarivalan என்கிற குறிச்சொல்லை உருவாக்கி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யுங்கள் என்கிற கோரிக்கை சமூகவலைதளம் மூலமாகவே பரவியது.

நோயுற்ற 78 வயது தந்தையை உடனிருந்து கவனிக்க,ஒரே மகனாக பெற்றோரின் இறுதி நாட்களிலாவது உடனிருந்து கவனிக்க பேரறிவாளனை விடுதலை செய்யக் கோருவோம் என்று தார்மீக அடிப்படையிலும்,

பேரறிவாளன் ஒப்புதல் வாக்குமூலத்தை தான் முழுமையாகப் பதிவு செய்யவில்லை. அவர் நிரபராதி எனச்சொல்லி தியாகராஜன் ஐபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்த பிறகும் விடுதலையை மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என்று சட்டப்படியும் பேரறிவாளன் விடுதலைக்குக் குரல்கொடுத்து வருகிறார்கள்.

இது இந்திய அளவில் பெரிதாகி வருகிறது.

கட்சிகள் இல்லாமல் வெகுமக்களே களமிறங்கி முன்னெடுத்திருக்கும் இந்தப் பரப்புரையை அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என சமுதாய ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response